படப்பை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; 2 வாலிபர்கள் சாவு
படப்பை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியானார்கள்.
படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த கரசங்கால் அம்பேத்கர் தெரு கக்கன்ஜி நகரைச் சேர்ந்தவர் துளசி (வயது 30). ஒரத்தூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ் (33). இவர்கள் 2 பேரும் கூலி வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் ஒரகடம் அருகே உள்ள வல்லக்கோட்டையில் உள்ள உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றனர். பின்னர் மீண்டும் திரும்பி படப்பை நோக்கி வண்டலூர்-வாலாஜாபாத் சாலையின் அருகே வந்தபோது, ஒரகடம் நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.
இதில், தூக்கி வீசப்பட்ட இருவருக்கும் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விபத்து குறித்து மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இறந்த 2 பேரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story