நாகக்குடையான் பெரிய ஏரி ரூ.4.16 கோடியில் தூர்வாரப்படும்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தகவல்


நாகக்குடையான் பெரிய ஏரி ரூ.4.16 கோடியில் தூர்வாரப்படும்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தகவல்
x
தினத்தந்தி 3 Sept 2019 3:00 AM IST (Updated: 3 Sept 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

நாகக்குடையான் பெரிய ஏரி ரூ.4.16 கோடியில் தூர்வாரப்படும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

வேதாரண்யம்,

வேதாரண்யம் அருகே நாகக்குடையான் ஊராட்சியில் 262 ஏக்கரில் பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியினால் நாகக்குடையான், தாமரைப்புலம், கள்ளிமேடு, அவரிக்காடு உட்பட சுற்றுவட்டார கிராம மக்கள் பயன்பெற்று வந்தனர். இந்த ஏரி தூர்ந்து போனதால் மழை நீர் சேமிக்க இயலாமல் கடலில் வீணாக கலக்கிறது. இந்த ஏரியை தூர்வாரி, கரை பலப்படுத்தி தர வேண்டும் என நீண்ட நாட்களாக இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார், சிட்டி யூனியன் வங்கி நிர்வாகி காமகோடி, கூட்டுறவு வங்கி தலைவர் கிரிதரன், ஒப்பந்தகாரர் அன்பழகன், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் தியாகராஜன், தாசில்தார் சண்முகம் ஆகியோர் ஏரியை பார்வையிட்டு ஆலோசனை நடத்தினர்.

இதை தொடர்ந்து அமைச்சர் கூறியதாவது:- பெரிய ஏரியை தூர்வார ரூ.4.16 கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையில் ரூ.3 கோடியை சிட்டி யூனியன் வங்கியின் சமூக பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆண்டு தோறும் ரூ.1 கோடி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. எனவே விரைவில் ஏரி தூர்வாரும் பணி தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து ரூ.1 கோடிக்கான ஒப்பந்த படிவத்தில் சிட்டி யூனியன் வங்கி நிர்வாகி காமகோடி கையெழுத்திட்டு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் முன்னிலையில், கலெக்டரிடம் வழங்கினார். 

Next Story