நகர்ப்புற குடியிருப்பு பகுதிகளில் உள்ள மதுபான கடைகளை அகற்றாவிட்டால் தொடர் போராட்டம்: விக்கிரமராஜா பேட்டி
நகர்ப்புற குடியிருப்பு பகுதிகளில் உள்ள மதுபான கடைகளை அகற்றாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறினார்.
திருவாரூர்,
திருவாரூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் நீடாமங்கலம் ரெயில்வே கேட் பிரச்சினைக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட மேம்பாலம் கட்டும் பணியை விரைந்து தொடங்கி போக்குவரத்து நெரிசலை குறைக்கவேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நகர்ப்புற பகுதிகளில் உள்ள மதுபான கடைகளை அகற்ற வேண்டும். இல்லையெனில் மதுபான கடைகளை அகற்றும் வரை வணிகர் சங்கங்களின் சார்்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும். ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட பிறகு வியாபாரம் 37 சதவீதம் குறைந்துவிட்டது. இதை எப்படி சரி கட்ட வேண்டும் என அரசுகள் யோசிக்க வேண்டும். இந்தியாவில் தான் அதிகமாக 28 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
வரிவிதிப்பு அதிகமாக இருந்தால் வரி ஏய்ப்பும் அதிகமாக இருக்கும். அத்தியாவசிய பொருட்களான கடுகு, மிளகு, சீரகம், பருப்பு போன்ற மளிகை பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும். வங்கிகளை இணைத்தல் என்பதை யாரும் பாதிக்காத வகையில் படிப்படியாக சென்றுதான் முறைப்படுத்த அரசு முயற்சிக்க வேண்டும். சாலை பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் கடைத்தெருவுக்கு வரும் சாமானிய மக்களுக்கு போலீசார் மிரட்டுவதாக இருக்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மாவட்ட செயலாளர் ஆதவன் வரவேற்றார். முடிவில் மாவட்ட துணைத் தலைவர் மதிவாணன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story