தஞ்சையில் பலத்த மழை: வீதிகளில் கழிவுநீர் ஓடியதால் மக்கள் அவதி
தஞ்சையில் பலத்த மழை பெய்தது. வீதிகளில் கழிவுநீர் ஓடியதால் மக்கள் அவதிப்பட்டனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டத்தில் சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தஞ்சையில் நேற்றுகாலை முதல் மாலை வரை வெயில் அடித்தது. மாலை 5 மணி அளவில் திடீரென பலத்த மழை பெய்தது. இந்த மழை 1 மணிநேரம் நீடித்தது. மழையினால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பழைய பஸ் நிலையம் அருகே அண்ணாசாலையில் குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் இருசக்கர வாகனங்களில் சென்றோர், நடந்து சென்றவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
தெற்குவீதியில் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீருடன் மழைநீரும் சேர்ந்து வீதியில் ஓடியது. கீழவீதியும், தெற்குவீதியும் சந்திக்கும் இடத்தில் குளம்போல் தேங்கி நின்றதால் மக்கள் அவதிப்பட்டனர். கீழவீதியில் உள்ள கடைகளுக்கு மக்கள் செல்ல முடியாத அளவுக்கு கழிவுநீரும், மழைநீரும் சென்றது. வடக்குவீதியிலும் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டதால் கழிவுநீர் வீதியில் சென்றது. இதனால் துர்நாற்றம் வீசியது.
தஞ்சை காமராஜர் மார்க்கெட்டிற்கு செல்வதற்கு 2 வழிகள் உள்ளன. அய்யங்கடை தெரு வழியாக ஏராளமானோர் மார்க்கெட்டிற்கு சென்று வருவது வழக்கம். ஆனால் நேற்று அய்யங்கடை தெருவில் கழிவுநீரும், மழைநீரும் கலந்து தேங்கி நின்றது. அந்த பகுதியில் உள்ள சில வீடுகள், கடைகளுக்குள் கழிவுநீர் புகுந்தது. விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்காக காய்கறிகள், பூஜை பொருட்கள் வாங்குவதற்காக மார்க்கெட்டிற்கு வந்தவர்கள் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டது.
எப்போது மழை பெய்தாலும் இதே நிலை தான். தெற்குவீதி, கீழவீதி, வடக்குவீதி, மேலவீதியில் செல்லக்கூடிய வடிகாலை முறையாக தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றினால் தான் மழை நேரத்தில் கழிவுநீர் வீதியில் செல்வதை தடுக்க முடியும் என பொதுமக்கள் தெரிவித்தனர். தற்போது ஆறுகளில் தண்ணீர் சென்று கொண்டு இருப்பதால் சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மழையும் அவ்வப்போது பெய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story