ஆலத்தூரில், பள்ளி வளாகத்தில் அபாய நிலையில் குடிநீர் தொட்டி - அதிகாரிகள் கவனிப்பார்களா?
ஆலத்தூரில் பள்ளி வளாகத்தில் அபாய நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
பட்டுக்கோட்டை,
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஆலத்தூர் கிராமத்தில் உள்ள அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் 1983-ம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. இதன் மூலம் ஆலத்தூர் வடக்குத்தெரு, நடுத்தெரு பகுதிகளை சேர்ந்த 3 ஆயிரம் பேரின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு 35 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால் மிகவும் பழுதாகி சிமெண்டு காரைகள் அடிக்கடி பெயர்ந்து விழுகின்றன. இதனால் குடிநீர் தொட்டி எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் இருப்பதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
பள்ளி வளாகத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி அபாய நிலையில் இருப்பது மாணவிகளையும், ஆசிரியர்களையும் அச்சத்துக்கு ஆளாக்கி உள்ளது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை புகார் மனு அனுப்பிய பின்னரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
அபாய நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை அப்புறப்படுத்தி புதிய குடிநீர் தொட்டி கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 3 ஆண்டுகளாக கிராம சபை கூட்டங்களில் பொதுமக்கள் தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி உள்ளனர். இந்த நிலையில் தற்போது பொதுமக்கள் கையெழுத்து இயக்கம் நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்ப ஏற்பாடு செய்து வருகின்றனர்.
அபாய நிலையில் உள்ள குடிநீர் தொட்டியை அதிகாரிகள் கவனித்து தொட்டியை இடித்து விட்டு புதிதாக குடிநீர் தொட்டி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
Related Tags :
Next Story