ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைவில் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு


ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைவில் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு
x
தினத்தந்தி 3 Sept 2019 3:30 AM IST (Updated: 3 Sept 2019 2:11 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைவில் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

மதுரை,

மதுரை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.159 கோடியே 79 லட்சத்தில் பெரியார் பஸ் நிலையம் கட்டுமான பணி, ரூ.40 கோடியே 19 லட்சம் செலவில் வடக்கு ஆவணி மூல வீதியில் பல்லடுக்கு வாகன காப்பகம், ரூ.61 கோடியே 41 லட்சம் செலவில் ராஜா மில் ரோடு முதல் குருவிக்காரன் சாலை வரை வைகை ஆறு மேம்பாட்டு பணி, ரூ.8 கோடியே 21 லட்சம் செலவில் மீனாட்சி பூங்கா மற்றும் நான்கு சித்திரை வீதிகள் புதுப்பித்தல் பணி, ரூ.6 கோடியே 83 லட்சம் செலவில் குன்னத்தூர் சத்திரம் கட்டுமான பணி, ரூ.2 கோடியே 65 லட்சம் செலவில் பெரியார் பஸ் நிலையத்தில் சுற்றுலா தகவல் மையம், ரூ.3 கோடியே 34 லட்சம் செலவில் திருமலை நாயக்கர் மகால் சுற்றியுள்ள பகுதிகளை மேம்படுத்துதல் பணி, ரூ.39 லட்சம் செலவில் விளக்குத்தூண் பகுதியை ஒளிர வைத்தல் மற்றும் பத்துத்தூண் பகுதியை மேம்படுத்துதல் பணி ஆகியவை நடந்து வருகிறது.

இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு மத்திய அரசு 50 சதவீத நிதி வழங்குகிறது. மீதமுள்ள 50 சதவீத நிதியை தமிழக அரசும், மாநகராட்சியும் வழங்குகிறது. இந்த ஸ்மார்ட் சிட்டி திட்ட செயலாக்கத்திற்காக மதுரை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் என்ற பெயரில் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.

அதன் தலைவராக தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரிய மேலாண்மை இயக்குனர் ஹரிஹரன் உள்ளார். இயக்குனராக மத்திய நகர்புற அமைச்சகத்தின் துணை இயக்குனர் அமிதா குப்தாவும், மேலாண்மை இயக்குனராக மாநகராட்சி கமிஷனர் விசாகன் உள்ளனர். மத்திய அரசின் உத்தரவுப்படி, ஸ்மார்ட் சிட்டி பணிகளை தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.

அதன்படி திருமலை நாயக்கர் மகால் அருகில் நடந்து வரும் பணிகளை இயக்குனர் அமிதா குப்தா ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி கமிஷனர் விசாகன் உடன் இருந்தார். முன்னதாக தலைவர் ஹரிஹரன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

Next Story