தேசிய சுகாதார திட்ட நிதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா? அரசு மருத்துவமனைகளில் ஆய்வு


தேசிய சுகாதார திட்ட நிதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா? அரசு மருத்துவமனைகளில் ஆய்வு
x
தினத்தந்தி 3 Sep 2019 10:30 PM GMT (Updated: 3 Sep 2019 3:20 PM GMT)

திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தேசிய சுகாதார திட்ட நிதி முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு நடக்கிறது.

முருகபவனம்,

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள மாவட்ட, தாலுகா மற்றும் ஊரக பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கு நவீன மருத்துவ கருவிகள் உள்பட பல்வேறு வசதிகள் செய்வதற்கு நிதி அளிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வழங்கப்பட்ட நிதி முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்த ஆய்வை நாடு முழுவதும் டெல்லி மருத்துவ அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரை தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள நிதி முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்பதை கண்டறிய திண்டுக்கல் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் முன்னேற்பாடாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட இருக்கிறது. அதன்படி இந்த மாவட்டங்களில் முதல் கட்ட ஆய்வு பணி தொடங்கி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் ஆய்வு பணி நடந்தது. அதைத்தொடர்ந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நேற்று ஆய்வு நடந்தது. இதுகுறித்து ஊரக மற்றும் நலப்பணிகள் கூடுதல் இயக்குனர் மாலதி பிரகாஷ் கூறியதாவது:-

தேசிய சுகாதார திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள நிதி முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளதா? நவீன மருத்துவ கருவிகளை பயன்படுத்தி மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள், சுத்தம், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பொது ஆய்வு பணியை 5 குழு கொண்ட மருத்துவ அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் நடத்தி வருகின்றனர். நாளை (வியாழக்கிழமை) வருகிற 5-ந் தேதி நடக்கவிருக்கும் ஆலோசனைக்கூட்டத்தில் இந்த ஆய்வின் முடிவுகள் அனைத்தும் கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் உள்ள சீமான்சி என்னும் நவீன பிரசவ சிகிச்சை பிரிவு, ரத்தவங்கி, கண் சிகிச்சை பிரிவு உள்பட பல்வேறு சிகிச்சை பிரிவுகளில் சென்னை, சீமான்சி மைய அதிகாரிகள் அன்புசெல்வி, சிவகாமி, நலப்பணிகள் இணை இயக்குனர்கள் சிவக்குமார், பூங்கோதை உள்பட மருத்துவ அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.

Next Story