திண்டிவனம் அருகே பட்டப்பகலில் துணிகரம், ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 4½ பவுன் நகை பறிப்பு


திண்டிவனம் அருகே பட்டப்பகலில் துணிகரம், ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 4½ பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 4 Sept 2019 4:15 AM IST (Updated: 3 Sept 2019 10:01 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே பட்டப்பகலில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 4½ பவுன் நகையை பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திண்டிவனம்,

திண்டிவனம் சஞ்சீவிராயன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்பாபு. இவரது மனைவி அமுதா (வயது 38). இவர் திண்டிவனம் அடுத்த கிராண்டிபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை அமுதா வழக்கம்போல் தனது ஸ்கூட்டரில் கிராண்டிபுரம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு புறப்பட்டார்.

திண்டிவனம்-வெள்ளிமேடுபேட்டை சாலையில் இருந்து கிராண்டிபுரம் செல்லும் கிராம சாலையில் திரும்பியபோது, பின்னால் ஹெல்மெட் அணிந்தபடி ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் திடீரென அமுதாவின் கழுத்தில் கிடந்த 4½ பவுன் நகையை பறித்துக் கொண்டு, அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். மர்மநபர்கள் நகையை பறித்தபோது அமுதா நிலைதடுமாறி ஸ்கூட்டருடன் கீழே விழுந்தார்.

இதில் காயமடைந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் ஸ்கூட்டரில் தனியாக சென்ற பெண்ணிடம் மர்மநபர்கள் நகையை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story