அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்களை நியமிக்கக்கோரி, பொதுமக்கள் திடீர் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்களை நியமிக்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சங்கராபுரம்,
சங்கராபுரத்தில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு 7 டாக்டர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். டாக்டர்கள் குறைவாக இருப்பதால் நோயாளிகளுக்கு சரியான முறையில் சிகிச்சை அளிப்பதில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று 2 டாக்டர்கள் மட்டுமே பணிக்கு வந்ததாக தெரி கிறது. இதனால் மருத்துவமனைக்கு வந்த ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதியடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கூடுதல் டாக்டர்களை நியமிக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ஏழுமலை தலைமையில் வட்ட தலைவர் பாஸ்கர், வட்ட செயலாளர் வெங்கடேசன், வட்ட துணை செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் மருத்துவமனை அருகில் சங்கராபுரம்- பூட்டை சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவச்சந்திரன், சவுக்கத் அலி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க வேண்டும். விடுப்பில் செல்லும் டாக்டருக்கு பதிலாக வேறு டாக்டரை பணியில் அமர்த்த வேண்டும், நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சை அளித்திட வேண்டும், மருத்துவமனையில் புறநோயாளிகளுக்காக குடிநீர், கழிவறை வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று கூறினர்.
அதற்கு போலீசார், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக கூறி பொதுமக்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் சங்கராபுரம்- பூட்டை சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது.
Related Tags :
Next Story