கோஷ்டி மோதலில் ரவுடி வெட்டிக்கொலை


கோஷ்டி மோதலில் ரவுடி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 4 Sept 2019 3:45 AM IST (Updated: 3 Sept 2019 10:27 PM IST)
t-max-icont-min-icon

வியாசர்பாடியில் முன்விரோதத்தால் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் ரவுடி சராமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

பெரம்பூர்,

சென்னை வியாசர்பாடி கல்யாணபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் தணிகாசலம். இவரது மகன் கோகுல்நாத் (வயது 23). இவருக்கு திருமணமாகி மீனா என்ற மனைவி 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவர் மீது கொலை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருந்தன. இந்த நிலையில் இவருக்கும், ராசைய்யா என்ற ரவுடி கும்பலுக்கும் மாமூல் வசூலிப்பதில் கோஷ்டி மோதல் ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் ராசைய்யாவை தீர்த்துக்கட்ட கோகுல்நாத் முடிவு செய்துள்ளார்.

நேற்று முன்தினம் வியாசர்பாடி சுந்தரம் லைன் பகுதியில் நடந்து வந்த ராசைய்யாவை, அரிவாளால் கோபிநாத் வெட்டியுள்ளார். இதில் காயத்துடன் ராசைய்யா தப்பி ஓடிவிட்டார்.

பின்னர் இரவு 10 மணி அளவில் ராசைய்யா கூட்டாளிகள் 6 பேர் சேர்ந்து கோகுல்நாத்தை தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். தேசிங்க புரம் 1-வது தெருவில் நடந்து வந்த கோகுல்நாத்தை பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்து சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கோபிநாத்தை அக்கம்பக்கத்தினர் மீட்டு, சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனர் சாய்சரண் தேஜஸ்வி தலைமையில், உதவி கமிஷனர்கள் அழகேசன், சுரேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.

Next Story