காளையார்கோவில் ஒன்றிய பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் - கண்காணிப்பு அலுவலர் ஆய்வு


காளையார்கோவில் ஒன்றிய பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் - கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
x
தினத்தந்தி 4 Sept 2019 4:00 AM IST (Updated: 3 Sept 2019 11:01 PM IST)
t-max-icont-min-icon

காளையார்கோவில் ஒன்றியம் உள்ளிட்ட மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.

சிவகங்கை,

மாவட்ட வளர்ச்சி பணிகள் கண்காணிப்பு அலுவலராக தமிழ்நாடு கனிம நிறுவன மேலாண்மை இயக்குனர் மகேசன்காசிராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இதையொட்டி சிவகங்கை வந்த அவர் மாவட்டத்தில் நடைபெறும் திட்ட பணிகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஜெயகாந்தன் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினார்.

பின்னர் அவர் சிவகங்கை மற்றும் காளையார் கோவில் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், காஞ்சிராங்கல் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ் செயல்பட்டு வரும் நாற்றங்கால் பண்ணையையும், ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் கண்மாய்களில் மேற்கொள்ளப்படும் குடிமராமத்துப் பணிகளையும் அவர் பார்வையிட்டார்.

பின்னர் காளையார் கோவில் ஊராட்சி ஒன்றியம் அல்லூர் மற்றும் முடிக்கரை ஊராட்சிகளில் பெருமளவு மரக்கன்றுகள் நடும் திட்ட பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து இந்த ஊராட்சியில் பொதுப்பணித்துறை மூலம் கண்மாய்களில் மேற்கொள்ளப்படும் குடிமராமத்துப் பணிகளையும், சேதாம்பல் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் கண்மாய்களில் மேற்கொள்ளப்படும் குடிமராமத்துப் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து மறவமங்களம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் ஆண்கள் சுகாதார வளாகத்தையும், பள்ளி மற்றும் அங்கான்வாடி மையங்களில் உள்ள கழிப்பறைகளை பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்தவர்களிடம் போதுமான வசதிகள் உள்ளதா என்றும் கழிப்பறைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்றும் கேட்டறிந்தார். சூசையப்பர் பட்டிணம் ஊராட்சியில் மத்திய அரசின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் முடிவுற்ற சாலை பணிகளை பார்வையிட்டார்.

பின்னர் கல்லல் ஊராட்சி ஓன்றியம், பனங்குடி ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ஊருணிகளில் மேற்கொள்ளப்படும் குடிமராமத்துப் பணிகளையும், மத்திய அரசின் பசுமை வீடு திட்டத்தில் பயனாளிகள் வீடு கட்டும் பணிகளையும், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தன்னான் கண்மாயில் உள்ள வரத்துக்கால்வாய்களில் தடுப்பணை அமைத்தல் பணிகளையும், அ.சிறுவயல் ஊராட்சியில் பொதுப்பணித்துறை மூலம் கண்மாய்களில் மேற்கொள்ளப்படும் குடிமராமத்துப் பணிகளையும் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், ஊரக வளர்ச்சி பொறியாளர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஜினிதேவி, காமராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story