தாலுகா அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த ஜாக்டோ-ஜியோ முடிவு


தாலுகா அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த ஜாக்டோ-ஜியோ முடிவு
x
தினத்தந்தி 4 Sept 2019 4:30 AM IST (Updated: 3 Sept 2019 11:18 PM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் தாலுகா அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று ஜாக்டோ- ஜியோ கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சிவகங்கை,

சிவகங்கையில் தமிழ்நாடு அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ சிவகங்கை மாவட்ட கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார் தலைமையிலும், இணை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்துப்பாண்டியன், ஜோசப் சேவியர் முன்னிலையிலும் சிவகங்கையில் நடைபெற்றது.

மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் சங்கர் உள்பட ஊழியர் சங்கங்களின் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:- தொடக்கக்கல்வி நிர்வாகம் குறித்த அரசாணைகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள அனைத்து வகை நடவடிக்கைகளையும் ரத்து செய்திட வேண்டும். தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும்.

இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை களைந்திட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்ட போராட்டத்தினை சென்னையில் மாநில ஜாக்டோ-ஜியோ மூலம் நடத்துவது. வருகிற 6-ந் தேதி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 9 தாலுகா அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்துவது.

தொடர்ந்து 13-ந் தேதி சிவகங்கை, திருப்பத்தூர், தேவகோட்டை மாவட்ட கல்வி அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது. இந்த காலக்கட்டங்கள் வரை கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டால், வருகிற 24-ந் தேதி சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு பல ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை திரட்டி உண்ணா விரதம் நடத்துவது. இவ்வாறான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story