கோவை அருகே ஆடு மேய்க்க சென்ற 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் முதியவர் கைது


கோவை அருகே ஆடு மேய்க்க சென்ற 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் முதியவர் கைது
x
தினத்தந்தி 4 Sept 2019 3:30 AM IST (Updated: 4 Sept 2019 12:26 AM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே ஆடு மேய்க்க சென்ற 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பேரூர்,

கோவை மாவட்ட சமூக நலத்துறை சார்பில், பாலியல் தொந்தரவுகளை தடுக்கும் வகையில் ஒவ்வொரு பள்ளியிலும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கோவையை அடுத்த மதுக்கரை ஒன்றியத்திற்குட்பட்ட ஒரு பள்ளியில் கடந்த 28-ந் தேதி பாலியல் தொந்தரவுகளை தடுப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

அப்போது பள்ளி மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு குறித்து தகவல் தெரிவிக் குமாறு அதிகாரிகள் கூறினர். உடனே 11 வயது மாணவிகள் 2 பேர் மற்றும் 9 வயது மாணவி ஆகிய 3 பேர், தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து புகார் கூறினர்.

சம்பவத்தன்று ஆடு மேய்க்க சென்ற போது, முதியவர் ஒருவர் சாக்லெட் மற்றும் பிஸ்கட் கொடுத்து எங்களை பண்ணை வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு சென்ற பிறகு எங்களுக்கு அந்த முதியவர் பாலியல் தொல்லை கொடுத்தார். அதோடு இது குறித்து வெளியில் சொன்னால் 3 பேரையும் கொலை செய்து கிணற்றில் வீசி விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்தார் என்று அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இது குறித்து சமூக நலத்துறை அதிகாரிகள், பேரூர் மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் பேரூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகுச்செல்வி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இதில், கோவையை அடுத்த வீரகேரளம் அருகே சுண்டப்பாளையம் ஐ.என்.டி.யு.சி. நகரை சேர்ந்த பெருமாள்சாமி (வயது 72) என்பவர் 3 மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவர் பெருமாள்சாமியை கைது செய்தனர்.

Next Story