விளைபொருட்களை உலர்த்த சூரியஒளி கூடம் - பெண்களுக்கு 60 சதவீதம் மானியம்


விளைபொருட்களை உலர்த்த சூரியஒளி கூடம் - பெண்களுக்கு 60 சதவீதம் மானியம்
x
தினத்தந்தி 4 Sept 2019 4:15 AM IST (Updated: 4 Sept 2019 12:27 AM IST)
t-max-icont-min-icon

விளைபொருட்களை உலர்த்த சூரியஒளி கூடம் அமைப்பதற்கு பெண்களுக்கு 60 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

திண்டுக்கல்,

உணவு தானிய உற்பத்தியை பெருக்கும் வகையில் விவசாயத்துக்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்காக விதைகள், உரம், உழவு கருவிகள், அறுவடை கருவிகள் மானியத்தில் வழங்கப்படுகிறது. அதேபோல் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு, சூரிய சக்தியுடன் கூடிய மோட்டார் பொருத்தவும் மானியம் வழங்கப்படுகிறது.

மேலும் ஒருசில விளைபொருட்களை அறுவடை செய்ததும் உலர்த்துவது அவசியம். இதனை கருத்தில் கொண்டு விளை பொருட்களை உலர்த்துவதற்கு அரசு மானியத்தில் சூரியஒளி உலர் கூடம் அமைக்கப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர் அருகே திருமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சூரியஒளி உலர் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் பார்த்தசாரதி கூறியதாவது:-

மிளகாய், முருங்கை கீரை, கருவேப்பிலை, கொப்பரை தேங்காய், பாக்கு, தேயிலை, காபி விதைகள், பூண்டு, கிராம்பு, ஏலக்காய், மூலிகை செடிகள், காளான் ஆகியவற்றை உலர்த்தி விவசாயிகள் விற்பனை செய்வார்கள். இவற்றை வெயிலில் உலர்த்துவதால், விளை பொருட்களின் தரம் குறைந்து விடும். இதை தவிர்க்கும் வகையில் வேளாண் பொறியியல் துறை சார்பில் சூரியஒளி உலர் கூடம் அமைத்து தரப்படுகிறது.

இதில் பசுமை குடில் போன்று பாலிகார்பனேட் தகடுகளால் உலர் கூடம் அமைக்கப்படுகிறது. அதில் விளைபொருட்களை உலர்த்துவதால், இயற்கை தன்மை மாறாமல் அப்படியே இருக்கும். இதனால் உலர்ந்த விளைபொருட்களை நல்ல விலைக்கு விற்று லாபம் பெறலாம். இதற்காக 400 முதல் 1,000 சதுர அடி வரை கூடம் அமைக்க வேண்டும். இதற்காக வேளாண்மை எந்திர மயமாக்குதல் துணை இயக்க திட்டத்தில் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் சூரிய ஒளி உலர்கூடம் அமைக்க பெண்களுக்கு 60 சதவீதம் அல்லது ரூ.3½ லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதர விவசாயிகளுக்கு 50 சதவீதம் அல்லது ரூ.3 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இதேபோல் உழவன் செயலியில் சிட்டா, பட்டா, கிராமம், ஆதார் எண்ணை பதிவு செய்தும் பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Next Story