வேடசந்தூர் அருகே, நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார் - 5 பேர் உயிர் தப்பினர்
வேடசந்தூர் அருகே நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக 5 பேர் உயிர் தப்பினர்.
வேடசந்தூர்,
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா புதுதாமரைப்பாடியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 40). இவர் தனது உறவினர்கள் 4 பேருடன், கரூர் மாவட்டம் மஞ்சவெளியில் நடந்த கோவில் திருவிழாவுக்கு வந்தார். விழாவில் பங்கேற்ற அவர்கள், காரில் புதுதாமரைப்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை விஜயகுமார் ஓட்டினார்.
வேடசந்தூர்-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில், சத்திரப்பட்டி அருகே நேற்று மாலை கார் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென காரில் இருந்து கரும்புகை கிளம்பியது. இதனைக்கண்ட விஜயகுமார், காரை உடனடியாக நிறுத்தி விட்டார். பின்னர் அவசர, அவசரமாக காரில் இருந்து 5 பேரும் கீழே இறங்கி உயிர் தப்பினர்.
சிறிதுநேரத்தில் நடுரோட்டில் கார் கொழுந்து விட்டு தீப்பிடித்து எரிந்தது. கரும்புகையுடன் தீப்பற்றி எரிந்ததை கண்டு, அந்த சாலையில் வாகனங்களில் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வேடசந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் மருதை தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
பின்னர் காரில் எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் எரிந்து எலும்புக் கூடானது. இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். கார் தீப்பிடித்த சம்பவம் எதிரொலியாக, அந்த சாலையில் வந்த வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. மேலும் ஒரு மணி நேரத்துக்கு பிறகு அந்த சாலையில் போக்குவரத்து தொடங்கியது.
Related Tags :
Next Story