பாசன குளத்தை மீட்க துண்டு பிரசுரம் வெளியிட்ட சமூக ஆர்வலர் கைது
பாசன குளத்தை மீட்க துண்டுபிரசுரம் வெளியிட்ட சமூக ஆர்வலரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே குளந்திரான்பட்டு கிராமம் உள்ளது. இங்குள்ள சுமார் 10 ஏக்கர் பரப்பளவு உள்ள வெட்டுக்குளத்தை காணவில்லை எனவும், அதை மீட்க தைரியமான அதிகாரிகள் தேவை எனவும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கறம்பக்குடி பகுதியில் துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டது. குளத்தை மீட்க தேவைப்படும் அதிகாரிகள் யார்-யார்? என்ற பட்டியலும் அந்த பிரசுரத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இந்த துண்டு பிரசுரம் கறம்பக்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை வருவாய் துறை அதிகாரிகள் குளந்திரான்பட்டு கிராமத்திற்கு சென்று ஆக்கிரமிப்பு குளத்தை ஆய்வு செய்தனர். மேலும் நில அளவீடும் செய்யப்பட்டது. முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அந்த குளத்தின் ஆக்கிரமிப்பு சாகுபடி பயிர்களை அகற்றிக் கொள்ளும்படி விவசாயிகளை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
இதற்கிடையே தீத்தான் விடுதி கிராம நிர்வாக அதிகாரி ஜாஸ்மின் கறம்பக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில், குளந்திரான்பட்டு கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலரான துரைகுணா (வயது 43) என்பவர் அரசு அதிகாரிகளை அவதூறு செய்தும், அவரை அரசு அலுவலர்போல் காட்டி வேலை வாய்ப்பு தருவதாக குழப்பத்தை ஏற்படுத்தியும் துண்டுபிரசுரம் வெளியிட்டிருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
அதன்பேரில் கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து துரை குணாவை தேடி வந்தனர். இந்நிலையில், கறம்பக்குடி பஸ் நிலையம் அருகே நின்றுகொண்டிருந்த துரைகுணாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஆலங்குடி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். குளத்தை மீட்க துண்டு பிரசுரம் வெளியிட்டவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story