மதுரை நகருக்குள் இரவில் ஆம்னி பஸ்கள் வரக்கூடாது - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


மதுரை நகருக்குள் இரவில் ஆம்னி பஸ்கள் வரக்கூடாது - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 3 Sep 2019 11:30 PM GMT (Updated: 3 Sep 2019 7:29 PM GMT)

மதுரை நகருக்குள் இரவு நேரங்களில் ஆம்னி பஸ்கள் வருவதற்கு தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

மதுரை,

மதுரை ஆம்னி பஸ் உரிமையாளர் நலச்சங்கம் சார்பில் கடந்த 2015-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மதுரை மாட்டுத்தாவணியில் ஆம்னி பஸ் நிலையம் உள்ளது. ஆனால் இங்கு பஸ்களை பழுது பார்க்கும் ஒர்க் ஷாப்புகள் இல்லை. அதேபோல இரவு நேரங்களில் பயணிகள் இங்கு வந்து ஆம்னி பஸ்களை பிடிக்கவும் உரிய வசதிகள் இல்லை.

இந்தநிலையில் மதுரை நகருக்குள் ஆம்னி பஸ்கள் வந்து பயணிகளை ஏற்றி, இறக்க கட்டுப்பாடுகளை விதித்து கடந்த 2014-ம் ஆண்டு கலெக்டர் உத்தரவிட்டார். இதனால் ஆம்னி பஸ்களும், பயணிகளும் பாதிக்கப்படுகின்றனர். எனவே மதுரை நகருக்குள் நாள்தோறும் இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை ஆம்னி பஸ்கள் சென்று வர அனுமதிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை 2015-ம் ஆண்டு விசாரித்த ஐகோர்ட்டு, ஆம்னி பஸ்கள் மதுரை நகருக்குள் இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை சென்று வர அனுமதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இதனால் ஆம்னி பஸ்கள் நகருக்குள் சென்று வந்தன.

இந்தநிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி அனிதாசுமந்த் பிறப்பித்துள்ளார். அதில் பொதுமக்கள், வாகனங்களின் பாதுகாப்பை கருதி மாவட்ட நிர்வாகம் ஆம்னி பஸ்களை நகருக்குள் செல்ல தடைவிதித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும் ஆம்னி பஸ்கள் மதுரை நகருக்குள் இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை சென்று வரலாம் என கடந்த 2015-ம் ஆண்டு ஐகோர்ட்டு பிறப்பித்த இடைக்கால உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

Next Story