புவனகிரியில் பரபரப்பு, விநாயகர் சிலை ஊர்வலத்தில் மோதல் - 5 பேர் கைது


புவனகிரியில் பரபரப்பு, விநாயகர் சிலை ஊர்வலத்தில் மோதல் - 5 பேர் கைது
x
தினத்தந்தி 4 Sept 2019 3:15 AM IST (Updated: 4 Sept 2019 1:00 AM IST)
t-max-icont-min-icon

புவனகிரியில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

பரங்கிப்பேட்டை, 

சிதம்பரம் அருகே உள்ள மேல் புவனகிரி ஆட்டுதொட்டி தெருவை சேர்ந்தவர் அர்ஜூணன் மகன் பாஸ்கரன்(வயது 45). தொழிலாளி. இவருக்கும் புவனகிரி அங்காளம்மன் நகரை சேர்ந்த முருகன் மகன் வசந்த்(26) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருக்கிறது. நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தியையொட்டி மேல் புவனகிரியில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இந்த சிலையை மாலையில் புவனகிரி வெள்ளாற்றில் கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

ஊர்வலத்தில் பாஸ்கரன், வசந்த் தரப்பினரும் கலந்து கொண்டனர். அப்போது வெள்ளாறு அருகே வந்த போது, இவர்களுக்கிடையே வாய்தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் வசந்த் தனது ஆதரவாளர்களான விக்னேஷ்(28), முருகதாஸ் மகன் விஜய்(28), செல்லதுரை மகன் ஆகாஷ்குமார்(27), ராஜேஷ் மகன் கோபிநாத்(27) ஆகியோருடன் சேர்ந்து பாஸ்கரனை தாக்கினர். மேலும் இதை தடுக்க வந்த அவருடைய ஆதரவாளர்கள் சக்திவேல், மற்றொரு விஜய், இளவரசன், குமார், ஆகியோரையும் தாக்கினர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த பாஸ்கரன், அவருடைய ஆதரவாளர்கள் சக்திவேல், விஜய், இளவரசன், குமார் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வசந்த், விக்னேஷ், முருகதாஸ் மகன் விஜய், ஆகாஷ்குமார், கோபிநாத் ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story