பிளாஸ்டிக் தடையை ரத்து செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


பிளாஸ்டிக் தடையை ரத்து செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 4 Sept 2019 4:30 AM IST (Updated: 4 Sept 2019 1:30 AM IST)
t-max-icont-min-icon

பிளாஸ்டிக் தடையை ரத்து செய்யக்கோரிய வழக்கை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.

மதுரை,

மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்த நாகராஜன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

பிளாஸ்டிக் கேரி பை தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தேன். தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் சார்பில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் கேரி பேக்குகள் பயன்படுத்த தடைவிதித்து 25.6.2018 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த அரசாணையில் பாலி பிரப்போலின் (கார்பனேட்) பைகள் எனப்படும் கட்டைப்பைகளும் கடந்த டிசம்பரில் சேர்க்கப்பட்டன.

பாலி பிரப்போலின் (கார்பனேட்) பைகள் எனப்படும் கட்டைப்பைகள் 50 மைக்ரான் அளவுக்கு அதிகமானது. இவை சுற்றுச்சூழல் பாதுகாப்பு தன்மை மற்றும் நூறு சதவீத மறுசுழற்சி செய்யக்கூடியவை. மேலும் இந்த பைகள் நுண்துளைகளை கொண்டவை. சூரிய வெளிச்சம், காற்று, நீர் உள்ளிட்டவற்றை எளிதில் கடத்தும் தன்மை கொண்டவை.

மத்திய அரசின் பிளாஸ்டிக் விதிகளில் 50 மைக்ரான் அளவுக்கு குறைவாக உள்ள பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்ட பட்டியலில் இருந்து பாலி பிரப்போலின் பைகளை நீக்க வேண்டும். இந்த பைகள் 50 மைக்ரான் அளவுக்கு அதிகமானவை என்பதாலும், மறு சுழற்சியுடன் கூடிய, சுற்றுச்சூழலுக்கு ஏற்றது என்பதால் தடையை நீக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், தாரணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், “சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது“ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story