திருவாடானை யூனியனில் கலெக்டர் ஆய்வு: கண்மாய், ஊருணி ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு


திருவாடானை யூனியனில் கலெக்டர் ஆய்வு: கண்மாய், ஊருணி ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு
x
தினத்தந்தி 4 Sept 2019 4:15 AM IST (Updated: 4 Sept 2019 1:34 AM IST)
t-max-icont-min-icon

திருவாடானை யூனியனில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் வீரராகவராவ், கண்மாய், ஊருணி பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.

தொண்டி,

திருவாடானை யூனியனில் முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை கலெக்டர் வீரராகவராவ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக அவர் தொண்டி அருகே உள்ள மண்மலக்கரை கண்மாய் மராமத்து பணி நடைபெற்று வருவதை நேரில் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து கொடிபங்கு ஊராட்சி சிறுதவயல் கிராமத்தில் குடிநீர் ஊருணி தூர்வாரும் பணியையும், வட்டாணம் கிராமத்தில் பொதுப்பணித்துறை கண்மாய் மராமத்து பணியையும், நம்பியான்கோட்டை கிராமத்தில் ஊருணி மராமத்து பணியையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து பனஞ்சாயல் கிராமத்தில் ரூ.88 லட்சம் செலவில் பொதுப்பணித்துறையின் மூலம் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை அவர் பார்வையிட்டார். அப்போது அங்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் வரத்துக்கால்வாய் தூர்வாரும் பணியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்பு ரூ.36 லட்சம் மதிப்பில் நாவலூர் கிராமத்தில் நடைபெற்று வரும் கண்மாய் மராமத்து பணியை பார்வையிட்டார். அப்போது கிராம மக்கள் அவரிடம் நாவலூர் கிராமத்தில் கண்மாய் வரத்துக்கால்வாயில் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளதாகவும், இதனை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக்கொண்டனர்.

அப்போது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை அழைத்து வரத்துக்கால்வாயை சர்வே செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். இதேபோல ஓரியூரில் கண்மாய் வரத்துக்கால்வாயில் ஆக்கிரமிப்புகளையும் உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.

பின்னர் கட்டவிளாகம் அருகே உள்ள தணியன்பீர் கிராமத்தில் ரூ.35 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணியை பார்வையிட்டார். அப்போது கிராம மக்கள் கண்மாய்க்குள் சிறிய குளம் ஒன்றும், கிணறு மற்றும் படித்துறையும் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். உடனடியாக படித்துறை கட்ட வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். பின்னர் 14 நிதிக்குழு மானியத்தின் மூலம் தலா ரூ.2 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கிணறுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய மாவட்ட கலெக்டர் குடிமராமத்து பணிகளை இம்மாத இறுதிக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என்றும், கண்மாய் ஊருணிகளுக்குள் மண்டிக்கிடக்கும் காட்டுக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மேலும் கண்மாய், ஊருணிகளை முழுமையாக சர்வே செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உத்தரவிட்டார். அவருடன் தாசில்தார் சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், ஸ்டெல்லா லூர்துமேரி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர்கள் மகேந்திரபாண்டியன், முத்தமிழரசன், வருவாய் ஆய்வாளர் அருள் ஆகியோர் உடன் சென்றனர்.

Next Story