ரூ.1 கோடி கொடுத்து வாங்கியதாக கூறி பழைய கோர்ட்டு கட்டிடத்தில் பால் காய்ச்சி குடியேற முயன்ற பெண்
குளித்தலையில், ரூ.1 கோடி கொடுத்து வாங்கியதாக கூறி, பழைய கோர்ட்டு கட்டிடத்தில் பால் காய்ச்சி குடியேற முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
குளித்தலை,
கரூர் மாவட்டம் குளித்தலையில் தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள கட்டிடத்தில் சார்பு நீதிமன்றம் இயங்கி வந்தது. பல ஆண்டுகளுக்கு முன்பு குளித்தலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்டி திறக்கப்பட்ட பின்னர், பழைய கட்டிடத்தில் இயங்கி வந்த சார்பு நீதிமன்றம், ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு அங்கு செயல்பட்டு வருகிறது. இதையடுத்து, சார்பு நீதிமன்றம் செயல்பட்டு வந்த கட்டிடம் எவ்வித பயன்பாடும் இல்லாமல் உள்ளது.
இந்தநிலையில் அந்த கட்டிடத்தின் முன்பகுதியில் நேற்று ஒரு பெண் பால் காய்ச்சியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த நீதிமன்ற ஊழியர்கள், குளித்தலை போலீசாரை தொடர்பு கொண்டு, அந்த பெண்ணை அப்புறப்படுத்த கூறியுள்ளனர். அங்கு சென்ற போலீசார் பழைய நீதிமன்ற கட்டிடத்தில் குடியேற முயன்ற பெண்ணை வெளியே அழைத்து வந்தனர். மேலும் அந்த பெண் வைத்திருந்த பாத்திரங்களையும் அப்புறப்படுத்தி, பழையநீதிமன்ற கட்டிடத்திற்கு வெளியே வைத்தனர். இதனை தொடர்ந்து பழைய நீதிமன்ற கட்டிடத்தின் நுழைவுவாயிலில் உள்ள இரும்பு கேட் பூட்டப் பட்டது.
அப்போது பழைய நீதிமன்ற கட்டிடத்தில் பால் காய்ச்சியதாக வெளியேற்றப்பட்ட பெண், தான் குளித்தலை அருகே உள்ள குட்டப்பட்டியைச் சேர்ந்தவர் என்றும், தனது பெயர் மீனாட்சி என்றும் கூறினார். மேலும் தான் ரூ.1 கோடி கொடுத்து அந்த இடத்தை வாங்கியுள்ளதாகவும், தன்னை எதற்காக வெளியேற்றினார்கள், என்றும் கேட்டார். அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருந்த காரணத்தால், அவர் பற்றி தெரிந்த மற்றொரு பெண்ணுடன், அந்த பெண்ணையும், அவர் வைத்திருந்த பாத்திரங்களையும் ஆட்டோவில் ஏற்றி போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story