தவுட்டுபாளையம்-மண்மங்கலம் உள்பட 8 இடங்களில் மேம்பாலம் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்


தவுட்டுபாளையம்-மண்மங்கலம் உள்பட 8 இடங்களில் மேம்பாலம் - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்
x
தினத்தந்தி 4 Sept 2019 4:30 AM IST (Updated: 4 Sept 2019 1:44 AM IST)
t-max-icont-min-icon

தவுட்டுபாளையம்-மண்மங்கலம் உள்பட 8 இடங்களில் மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறினார்.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் மண்மங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட மண்மங்கலம், வாங்கல் மற்றும் மின்னாம்பள்ளி, பஞ்சமாதேவி ஆகிய ஊராட்சிகளில் நேற்று, பொதுமக்களை நேரடியாக சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறும் முகாம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

இந்த முகாமில் பெறப்படும் மனுக்களில், முதியோர் உதவித்தொகை மற்றும் விதவை உதவித்தொகை கோரியே அதிக மனுக்கள் வருகின்றன. மக்களின் மனநிலையை உணர்ந்து அரசு சார்பில் தமிழகத்தில் 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை மற்றும் விதவை உதவித்தொகைகளை வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். எனவே அத்தகைய உதவித்தொகை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கரூர் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தவுட்டுப்பாளையம், மண்மங்கலம், செம்மடை பிரிவு, வெண்ணமலை பிரிவு, பெரியார் நகர், கோடங்கிபட்டி, வீரராக்கியம், அரவக்குறிச்சி ஆகிய 8 இடங்களில் முதல்-அமைச்சரின் உத்தரவை பெற்று விரைவில் மேம்பாலங்கள் அமைக்கும் பணி நடைபெற இருக்கின்றது. போக்குவரத்துத்துறையின் சாலை பாதுகாப்பு நிதியில் இருந்து தேசிய நெடுஞ்சாலையின் முக்கிய பகுதிகளில் உயர்மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டதால் அப்பகுதிகளில் விபத்துக்கள் குறைந்திருக்கிறது. அனைத்துப்பகுதிகளிலும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

முகாம்களில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, கரூர் வருவாய் கோட்டாட்சியர் சந்தியா, கரூர் வட்டார வளர்ச்சி அதிகாரி மனோகர், மண்மங்கலம் தாசில்தார் ரவிக்குமார், கரூர் நகர கூட்டுறவு வங்கி தலைவர் திருவிகா, கரூர் ஒன்றிய செயலாளர் என்ஜினீயர் கமலகண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story