விநாயகர் சிலை வைக்க பணம் வசூலிப்பதில் தகராறு: வாலிபர் குத்திக்கொலை; நண்பர் கைது
விநாயகர் சிலை வைக்க பணம் வசூலிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய நண்பரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
லால்குடி,
திருச்சி மாவட்டம் லால்குடி சின்ன செட்டி தெருவை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவருடைய மகன் பார்த்தசாரதி(வயது 22). பி.எஸ்சி. விசுவல் கம்யூனிகேசன் முடித்துள்ள இவர், யூடியூப்பில் சேனல் நடத்தி வந்தார். லால்குடி ஐஸ்வர்யா நகரை சேர்ந்த வரதராஜனின் மகன் தீனா என்ற தினேஷ்குமார்(20). டிப்ளமோ மெக்கானிக் முடித்து உள்ளார். பார்த்தசாரதியும், தினேஷ்குமாரும் நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு லால்குடி சின்ன செட்டி தெருவில் விநாயகர் சிலை வைக்க அப்பகுதி இளைஞர்கள் திட்டமிட்டிருந்தனர். இதற்காக பார்த்தசாரதி, தினேஷ்குமார், இவர்களின் நண்பர்கள் கார்த்திகேயன், பிரித்திவிராஜ், ஆனந்த் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பொதுமக்களிடம் நன்கொடை வசூல் செய்தனர். பின்னர் நேற்று முன்தினம் லால்குடி சின்ன செட்டி தெருவில் விநாயகர் சிலை வைத்து அதற்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டது. அப்பகுதி பொதுமக்கள் வந்து விநாயகரை வழிபட்டு சென்றனர்.
இந்தநிலையில் பொதுமக்களிடம் பணம் வசூல் செய்தபோது, பாய்லர் ஆலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் ரூ.1,000 நன்கொடை வழங்கியுள்ளார். அவரிடம் பணம் வாங்கிவிட்டு வந்த பின்னர், அந்த ஊழியரை பற்றி தினேஷ்குமார் தரக்குறைவாக திட்டியுள்ளார். இதுபற்றி அந்த ஊழியரிடம் பார்த்தசாரதி கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டதுடன், நன்கொடை பணம் வசூல் செய்வதில் தினேஷ்குமாருக்கும், பார்த்தசாரதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் மற்றொரு பிரச்சினையில் சண்டை நடந்துள்ளது. அந்த பிரச்சினையும் இதனுடன் சேரவே இருவருக்கும் இடையே நேற்று முன்தினம் மாலை கைகலப்பு ஏற்பட்டது. இதைப்பார்த்த அவருடைய நண்பர்கள், இருவரையும் சமரசம் செய்து வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் நேற்று முன்தினம் இரவு பார்த்தசாரதி, அவருடைய நண்பர் கார்த்திகேயன் உள்பட சிலர் விநாயகர் சிலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பார்த்தசாரதி மற்றும் அவருடைய நண்பர்கள் பிரச்சினையை பேசி முடிக்க தினேஷ்குமாரை நள்ளிரவு 12 மணியளவில் செல்போனில் அழைத்தனர்.
அப்போது மதுபோதையில் இருந்த தினேஷ்குமார், கத்தியை இடுப்பில் மறைத்து வைத்துக்கொண்டு, சின்ன செட்டி தெருவிற்கு வந்தார். அங்கு இந்த பிரச்சினை குறித்து பேசிக்கொண்டிருந்தபோது, மீண்டும் பார்த்தசாரதிக்கும், தினேஷ்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றவே, ஆத்திரம் அடைந்த தினேஷ்குமார், தான் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பார்த்தசாரதியின் மார்பில் குத்தினார். இதனால் அவர் அங்கேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார். இதைப்பார்த்த கார்த்திகேயன் தினேஷ்குமாரை தடுக்க முயன்றார். அப்போது அவருக்கும் கையில் கத்திக்குத்து விழுந்தது. பின்னர், தினேஷ்குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த தகராறில் பலத்த காயமடைந்த பார்த்தசாரதியையும், காயம் அடைந்த கார்த்திகேயனையும் அங்கிருந்தவர்கள் மீட்டு லால்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பார்த்தசாரதியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கார்த்திகேயன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுபற்றி தகவல் அறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் பார்த்தசாரதியின் உடலை பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து நண்பனை கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்ற தினேஷ்குமாரை தேடிவந்தனர்.
இதற்கிடையே தினேஷ்குமாரை லால்குடி ரவுண்டானா பகுதியில் இரவு ரோந்துப்பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் லால்குடி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story