வாணியம்பாடி அருகே, வியாபாரியின் வீட்டில் பிரியாணி சமைத்து சாப்பிட்ட கொள்ளையர்கள்


வாணியம்பாடி அருகே, வியாபாரியின் வீட்டில் பிரியாணி சமைத்து சாப்பிட்ட கொள்ளையர்கள்
x
தினத்தந்தி 4 Sept 2019 5:15 AM IST (Updated: 4 Sept 2019 1:45 AM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி அருகே தோல் வியாபாரியின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் பிரியாணி, மக்ருணி தயாரித்து சாப்பிட்டு விட்டு நகை, மோட்டார்சைக்கிளை எடுத்துக்கொண்டு தப்பியுள்ளனர்.

வாணியம்பாடி, 

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள சென்னாம்பேட்டை தக்கடி தெருவை சேர்ந்தவர் பாரூக் (வயது 50). இவர் தோல் வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் பெங்களூருவுக்கு சென்று இருந்தார். நேற்று காலை அத்தெருவின் வழியாக நடந்து சென்றவர்கள் பாரூக் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து வீட்டிற்குள் எட்டி பார்த்தனர். அப்போது வீடு முழுவதும் பொருட்கள் சிதறிக் கிடந்தன.

இதுகுறித்து அவர்கள் வாணியம்பாடி டவுன் போலீசாருக்கும், வீட்டின் உரிமையாளர் பாரூக்குக்கும் தகவல் அளித்தனர். உடனடியாக துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்தன. அதில் வைக்கப்பட்டிருந்த நகைகள் திருடப்பட்டிருந்தது. வெளியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளையும் காணவில்லை.

சமையலறைக்கு சென்றபோது அங்கு உணவு தயாரிக்கப்பட்டது தெரியவந்தது. காய்கறிகளும் வெட்டப்பட்டிருந்தது. அங்கு பார்த்தபோது அவர்கள் சமைத்து மீதம் வைத்திருந்த பிரியாணி, மக்ருணி ஆகியவை இருந்தன. எனவே வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் பிரியாணி, மக்ருணி தயாரித்து சாப்பிட்டுவிட்டு நகை, மோட்டார்சைக்கிளை திருடிக்கொண்டு தப்பியது தெரியவந்தது. இந்த நிலையில் பெங்களூருவுக்கு சென்றிருந்த பாரூக், நேற்று மாலை அவசர அவசரமாக வாணியம்பாடி திரும்பினார். அவர் தனது வீட்டை பார்வையிட்டபின் கொள்ளை குறித்து போலீசில் புகார் அளித்தார். அதில் நகையும், மோட்டார்சைக்கிளும் கொள்ளையடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். அதன்படி கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வாணியம்பாடி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய நகரங்கள் அடுத்தடுத்து அமைந்துள்ளன. கடந்தவாரம் திருப்பத்தூர் அருகே ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் நகைகளை கொள்ளையடித்துச்சென்றனர். தடுக்க முயன்ற சலூன் தொழிலாளி வெங்கடேசனை கம்பியால் தாக்கிவிட்டு தப்பினர். மறுநாள் முரளி என்பவர் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் சைக்கிளை திருடிக்கொண்டு தப்பினர்.

கடந்த 3 தினங்களுக்கு முன்பு நாட்டறம்பள்ளியில் வக்கீல் சிவராமன் என்பவர் வீட்டுக்குள் புகுந்து பெண்கள் மீது மயக்க ஸ்பிரே அடித்து பணத்தையும்,மொபட்டையும் கொள்ளையர்கள் கொள்ளையடித்து தப்பினர். இந்த முறை மோட்டார்சைக்கிள் திருடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கொள்ளையர்கள் சர்வசாதாரணமாக வீட்டிற்குள் பிரியாணி தயாரித்து சாப்பிட்டு விட்டு கொள்ளையடித்து செல்லும் அளவுக்கு துணிந்துள்ளனர். ஏற்கனவே ஜோலார்பேட்டை பகுதியிலும் கடந்த 6 மாதத்திற்குள் தொடர் கொள்ளைகள் நடந்துள்ளன. இந்த இடங்கள் ஆந்திர மாநிலத்துக்கும், கர்நாடக மாநிலத்துக்கும் அருகாமையில் உள்ளது. எனவே கொள்ளையில் ஈடுபட்டவர்கள் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகின்றனர். தொடர் சம்பவங்களால் மக்கள் பீதியில் உள்ளதால் போலீசார் ரோந்துப்பணியை தீவிரப்படுத்தி கொள்ளைகள் தொடர்வதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story