‘ஜல்சக்தி அபியான்’-நீர் மேலாண்மை இயக்கத்தின் ‘நீர் வங்கி’ சேவை தொடக்கம் - கலெக்டர் தகவல்


‘ஜல்சக்தி அபியான்’-நீர் மேலாண்மை இயக்கத்தின் ‘நீர் வங்கி’ சேவை தொடக்கம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 4 Sept 2019 3:45 AM IST (Updated: 4 Sept 2019 1:46 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் ‘ஜல்சக்தி அபியான்’-நீர் மேலாண்மை இயக்கத்தின் ‘நீர் வங்கி’ சேவை தொடங்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை,


திருவண்ணாமலை மாவட்டத்தில் ‘ஜல்சக்தி அபியான்’ நீர் மேலாண்மை இயக்கம் மூலமாக கடந்த 1.7.2019 முதல் மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்தும், ஏரி, குளங்கள், நீர் நிலைகளை பாதுகாப்பது, சீரமைப்பது குறித்தும் பல்வேறு பணிகள் மற்றும் விழிப்புணர்வுகள் அரசு துறைகள், மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் தமிழகத்தில் உள்ள பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறையின் கட்டுபாட்டில் உள்ள ஏரிகளை அந்தந்த பகுதி விவசாயிகளின் பங்களிப்புடன் குடிமராமத்து திட்டத்தின் கீழ் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் குடிமராமத்து பணிகள் நீரினை பயன்படுத்தும் சங்கங்கள் மூலமாக நியமன முறையில் விவசாயிகளின் 10 சதவீத பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் தண்ணீர் வீணாவதை தடுத்தும், தண்ணீரை சேமித்தும், பாசன உறுதியளிக்கவும், நீர் ஆதாரத்தை பெருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 3-வது கட்டமாக குடிமராமத்து திட்டத்தின் கீழ் 2019-20-ம் ஆண்டு 32 ஏரிகள், 5 அணைக்கட்டுகள் ரூ.16 கோடியே 7 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 12,213 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.

அத்துடன் தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர்மேலாண்மை இயக்கத்தின் சார்பில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 2019-20-ம் ஆண்டு ரூ.499 கோடியே 99 லட்சத்தில் கிராமம் தோறும் சிறுபாசன ஏரிகள், குட்டைகள் மற்றும் ஊரணிகளின் கொள்ளளவினை அதிகரிக்கும் பணிகள் மற்றும் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 429 சிறுபாசன ஏரிகள், 1,094 குளங்கள் மற்றும் ஊரணிகள் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது முதல் கட்டமாக 321 சிறுபாசன ஏரிகள் ரூ.16 கோடியே 5 லட்சத்திலும், 1,094 குளங்கள் மற்றும் ஊரணிகள் ரூ.10 கோடியே 94 லட்சத்திலும் ஆக மொத்தம் ரூ.26 கோடி 99 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் கலெக்டர் தலைமையில் ‘ஜல்சக்தி அபியான்’ - நீர் மேலாண்மை இயக்கத்தின் ‘நீர் வங்கி’ சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இந்த சேவையினை கடந்த 31.8.2019 அன்று ஆரணியில் நடந்த விழாவில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்து தனது பங்களிப்பாக ரூ.2 லட்சமும், தூசி கே.மோகன் எம்.எல்.ஏ. ரூ.1 லட்சமும் கலெக்டரிடம் வழங்கினர்.

பெருகி வரும் மக்கள் தொகையையும், அதற்கேற்ப பெருகும் நீரின் தேவையினையும் கருத்தில் கொண்டு இனி நாம் ஒவ்வொருவரும் நீரின் சேமிப்பை பற்றி சிந்தித்து, அடுத்த தலைமுறைக்கு வளமான நீராதாரத்தை விட்டுச்செல்ல வேண்டும். இந்த நீர் வள பாதுகாப்பு இயக்கத்தில் மிகப்பெரிய அளவில் பொதுமக்களும், இளைஞர்களும், தனியார் நிறுவனங்களும், அரசு சாரா நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் முனைப்புடன் பங்கேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒட்டுமொத்த நலனை பாதுகாக்க தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story