பாப்பாரப்பட்டி அருகே, பெண்ணிடம் நகை பறித்த 3 வாலிபர்கள் கைது


பாப்பாரப்பட்டி அருகே, பெண்ணிடம் நகை பறித்த 3 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 4 Sept 2019 4:00 AM IST (Updated: 4 Sept 2019 1:47 AM IST)
t-max-icont-min-icon

பாப்பாரப்பட்டி அருகே நடந்து சென்ற பெண்ணிடம் நகையை பறித்து சென்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

பாப்பாரப்பட்டி,

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள பிக்கம்பட்டி பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண் கடந்த 28-ந்தேதி கணினி பயிற்சிக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந் தார். அப்போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். பின்னால் அமர்ந்து இருந்த ஒரு வாலிபர் அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 1¾ பவுன் நகையை பறிக்க முயன்றான். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண் நகையை கையில் பிடித்து கொண்டார். பாதி நகையை பறித்து கொண்டு அவர்கள் மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.

இதுகுறித்து அந்த இளம் பெண் பாப்பாரப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். நேற்று காலை போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ் தலைமையில் போலீசார் திருமல்வாடி பிரிவு ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை நிறுத்தி விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் பாப்பாரப்பட்டி அருகே உள்ள பூதிநத்தம் பகுதியை சேர்ந்த விஜி(வயது21), பிக்கிலியை சேர்ந்த அசோக்(26), கரியன்(22) என்பதும், பிக்கம்பட்டியை சேர்ந்த இளம்பெண்ணிடம் நகையை பறித்து சென்றதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் பாப்பாரப்பட்டி, பாலக்கோடு பகுதிகளில் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 3 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர்.

Next Story