கெங்கவல்லி தாலுகா அலுவலகம் முன்பு அண்ணன், தம்பி தீக்குளிக்க முயற்சி


கெங்கவல்லி தாலுகா அலுவலகம் முன்பு அண்ணன், தம்பி தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 4 Sept 2019 3:45 AM IST (Updated: 4 Sept 2019 1:47 AM IST)
t-max-icont-min-icon

கெங்கவல்லி தாலுகா அலுவலகம் முன்பு அண்ணன், தம்பி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கெங்கவல்லி, 

கெங்கவல்லி தாலுகாவிற்கு உட்பட்ட இலுப்பநத்தம் பகுதியை சேர்ந்தவர் அருள் (வயது 40), இவருடைய தம்பி பிரகாஷ் (37). இவர் மாற்றுத்திறனாளி. இவர்கள் 2 பேரும் இலுப்பநத்தம் ஊராட்சியில் 1½ ஏக்கர் விவசாய நிலத்தை பராமரித்து வருகின்றனர். இவர்களது விவசாய தோட்டத்தின் அருகே அரசுக்கு சொந்தமான ஓடை புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாக தெரிகிறது.

எனவே எங்களது தோட்டத்துக்கு நீர் ஆதாரம் இல்லாமல் உள்ளது. மேலும் வழித்தடம் மறிக்கப்படுகிறது என்றும், இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் அருள் மற்றும் அவருடைய தம்பி பிரகாஷ் ஆகியோர் மாவட்ட கலெக்டர், ஆத்தூர் உதவி கலெக்டர், கெங்கவல்லி தாசில்தார் ஆகியோர்களுக்கு மனுக்களை கொடுத்தனர். ஆனால் இந்த மனுக்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து நேற்று காலை 10.30 மணிக்கு அருள், பிரகாஷ் ஆகியோர் கெங்கவல்லி தாலுகா அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென்று அலுவலகம் முன்பு தாங்கள் கொண்டு வந்த மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். மேலும் அவர்கள் நாங்கள் கொடுத்த மனு மீது விசாரணை நடத்தி ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று கோஷமிட்டனர். உடனே அங்கு வந்த கெங்கவல்லி தாசில்தார் சிவக்கொழுந்து மற்றும் அதிகாரிகள், அவர்கள் தீக்குளிப்பதை தடுத்ததுடன், மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

அண்ணன், தம்பி தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் கெங்கவல்லி தாலுகா அலுவலக பகுதியில் நேற்று பரபரப்பு நிலவியது. இது தொடர்பாக பொதுமக்கள் கூறுகையில், கெங்கவல்லி பகுதியில் அரசுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இவற்றை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story