வாடகை பாக்கி செலுத்தாததால் சீல் வைக்கப்பட்ட ஓட்டலில் இருந்து பொருட்கள் பறிமுதல்


வாடகை பாக்கி செலுத்தாததால் சீல் வைக்கப்பட்ட ஓட்டலில் இருந்து பொருட்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 4 Sept 2019 3:30 AM IST (Updated: 4 Sept 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் உள்ள கடைக்கு வாடகை பாக்கி செலுத்தாததால் சீல் வைக்கப்பட்ட ஓட்டலில் இருந்து பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சி, 

திருச்சி மத்திய பஸ் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் தனியார் கடைகள், ஓட்டல்கள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளுக்கு மாதவாடகை நிர்ணயம் செய்து வசூல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மத்திய பஸ் நிலையத்தில் இயங்கி வந்த கண்ணன் ரெஸ்டாரெண்ட் என்ற ஓட்டல் ஒன்று மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகையை செலுத்தாமல் பல வருடங்களாக ரூ.76 லட்சத்துக்கு மேல் பாக்கி வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் அந்த ஓட்டலை பூட்டி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

அதன்பிறகு வாடகை நிலுவைத்தொகையை செலுத்த காலஅவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் கால அவகாசம் முடிந்தும் வாடகை தொகையை செலுத்த வில்லை. இதனால் மாநகராட்சி பொன்மலை கோட்ட உதவி ஆணையர் தயாநிதி தலைமையில் அதிகாரிகள் மற்றும் போலீசார் முன்னிலையில் நேற்று காலை ஓட்டல் ‘சீல்’ உடைக்கப்பட்டது.

பின்னர் ஓட்டலுக்குள் இருந்த பாத்திரங்கள், அடுப்பு, மேஜை, நாற்காலி, மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் முறையாக கணக்கெடுத்து, அவற்றை அதிகாரிகள் பறி முதல் செய்து லாரியில் ஏற்றி மாநகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அதன்பிறகு மீண்டும் ஓட்டலுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

இது பற்றி ஓட்டல் உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் வந்து பணத்தை செலுத்தி பொருட்களை பெற்று கொள்ளாவிட்டால் அவை ஏலம் விடப்பட்டு அந்த தொகையை வசூல் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மாநகராட்சியின் இந்த திடீர் நடவடிக்கையால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story