தொட்டியம் அருகே, கோர்ட்டு ஊழியர் மர்ம சாவு - வாய்க்கால் புதரில் உடல் மீட்பு


தொட்டியம் அருகே, கோர்ட்டு ஊழியர் மர்ம சாவு - வாய்க்கால் புதரில் உடல் மீட்பு
x
தினத்தந்தி 3 Sep 2019 10:30 PM GMT (Updated: 3 Sep 2019 8:18 PM GMT)

தொட்டியம் அருகே வாய்க்கால் புதரில் மர்மமான முறையில் இறந்து கிடந்த கோர்ட்டு ஊழியரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தொட்டியம்,

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள ஸ்ரீராமசமுத்திரம் சங்கிலி கருப்பசாமி கோவில் அருகே உள்ள வாய்க்கால் புதரில் இறந்த நிலையில் ஒரு ஆண் உடல் கிடப்பதாக காட்டுப்புத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் இறந்து கிடந்தவர் கரூர் மாவட்டம் வேடிச்சிப்பாளையம் ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த சுக்கிரன் என்பவரின் மகன் கார்த்திகேயன் (வயது 34) என்பதும், இவர் கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வந்ததும், அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும் தெரியவந்தது. ஆனால் அவர் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை.

இதைத்தொடர்ந்து கார்த்திகேயனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனை யாராவது கொலை செய்து உடலை இங்கு வீசி சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமணமாக நிலையில் கார்த்திக்கேயன் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அவரின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story