குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் பி.குருபரபள்ளி ஊராட்சிக்குட்பட்டது மகாதேவபுரம், பேரிகை அருகே தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்திற்கு நீண்ட காலமாக தண்ணீர் வசதி இல்லை. மேலும் கிராம மக்கள் தண்ணீருக்காக மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த பகுதியில் பள்ளிக் கூடங்களும் இல்லை. இந்த கிராமத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி கற்க நீண்ட தூரம் சென்று வரும் நிலை உள்ளது. இவ்வாறு எந்தவித வசதியும் இன்றி துண்டிக்கப்பட்ட நிலையில் இந்த கிராமம் உள்ளது. இதனால் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மகாதேவபுரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு் காலிக்குடங்களுடன் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலத்திற்கு வந்தனர். அவர்கள் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி கேட்டு திடீரென அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும், வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சிகள்) ராமச்சந்திரனை சந்தித்து, கோரிக்கைகளை தெரிவித்து முறையிட்டனர். மேலும் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் கிராம மக்களை திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.
அப்போது குடிநீர் உள்ளிட்ட பிரச்சினையை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அலுவலர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story