பயிர் காப்பீட்டுத்தொகை வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம் - திருக்கடையூரில் நடந்தது


பயிர் காப்பீட்டுத்தொகை வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டம் - திருக்கடையூரில் நடந்தது
x
தினத்தந்தி 4 Sept 2019 3:00 AM IST (Updated: 4 Sept 2019 1:51 AM IST)
t-max-icont-min-icon

திருக்கடையூரில் பயிர் காப்பீட்டுத்தொகை வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருக்கடையூர்,

நாகை மாவட்டம் திருக்கடையூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் முன்பு 2017-2018-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத்தொகை உடனே வழங்கக்கோரி நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கிளை செயலாளர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் சிம்சன், ரவிச்சந்திரன், கோவிந்தசாமி, இளையராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதில் நாகை மாவட்டம் திருக்கடையூர் பகுதிகளில் உள்ள திருக்கடையூர், காழியப்பநல்லூர், பிள்ளைபெருமாள்நல்லூர், மாணிக்கபங்கு, மருதம்பள்ளம், டி.மணல்மேடு ஆகிய 6 ஊராட்சிகளில் இருந்து 1,875 பேர் பயிர் காப்பீடு செய்து இருந்தனர். இதில் 1,804 விவசாயிகளுக்கு மட்டும் காப்பீட்டுத்தொகை திருக்கடையூர் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் கொடுத்துள்ளனர். மீதமுள்ள 71 பேருக்கு காப்பீட்டுத்தொகை வரவில்லை.

மேலும் இதுபற்றி பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினர்.

எனவே உடனடியாக பயிர் காப்பீட்டுத்தொகையை வழங்க வேண்டும் என காத்திருப்பு போராட்டத்தில் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story