முத்துப்பேட்டையில் விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்பாக டி.ஐ.ஜி லோகநாதன் ஆய்வு
முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலம் தொடர்பாக டி.ஐ.ஜி லோகநாதன் ஆய்வு செய்தார்.
முத்துப்பேட்டை,
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் வருகிற 6-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இந்து முன்னணி சார்பில் 27-ம் ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுகிறது. இந்த ஊர்வலத்தில் ஜாம்புவானோடை, வடகாடு, உப்பூர், தில்லைவிளாகம், அரமங்காடு, ஆலங்காடு உள்பட 19 பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் எடுத்து வரப்படுகிறது.
முன்னதாக மதியம் 2 மணிக்கு ஜாம்புவானோடை வடக்காடு சிவன் கோவிலில் இருந்து புறப்பட்டு வைரவன்சோலை, ஜாம்புவானோடை தர்கா, மேலக்காடு, கோரையாற்று பாலம் பகுதி வழியாக முத்துப்பேட்டை ஆசாத்நகர் சென்று அங்கிருந்து திருத்துறைப்பூண்டி சாலை, பழைய பஸ் நிலையம் சென்று அங்கிருந்து பதற்றமான பகுதியாக கருதப்படும் பட்டுக்கோட்டை சாலையில் உள்ள நியூபஜார், கொய்யா முக்கம், பங்களாவாசல் வழியாக செம்படவன்காடு சென்று அங்குள்ள பாமனி ஆற்றில் மாலை 6 மணிக்கு விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன.
முத்துப்பேட்டை பதற்றம் நிறைந்த பகுதி என்பதால் ஊர்வலத்தில் அசாம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடபோவதாக கூறப்படுகிறது. மேலும் முத்துப்பேட்டை முழுவதும் போலீஸ் கட்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு பட்டுக்கோட்டை சாலை, மன்னார்குடி சாலை, திருத்துறைப்பூண்டி சாலை, வேதாரண்யம் சாலை ஆகிய பகுதிகளில் ஏற்கனவே இருந்த சோதனை சாவடிகளில் அல்லாமல் தற்காலிக சோதனை சாவடிகளும் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் முத்துப்பேட்டையில் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும் பாதையை தஞ்சை டி.ஐ.ஜி. லோகநாதன், திருவாரூர் மாவட்ட சூப்பிரண்டு துரை ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு இனிகோதிவ்யன், முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசாருடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர்.
Related Tags :
Next Story