தூத்துக்குடி இரும்பு வியாபாரியிடம் வெள்ளை காகிதத்தை ரூ.2 ஆயிரம் நோட்டாக மாற்றித்தருவதாக மோசடி
தூத்துக்குடி இரும்பு வியாபாரியிடம் வெள்ளை காகிதத்தை ரூ.2 ஆயிரம் நோட்டாக மாற்றித்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட சிவகாசியை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி தாளமுத்துநகர் சிலுவைப்பட்டியில் உள்ள முருங்கை தோட்டத்தில் சிலர் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாக தூத்துக்குடி தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் நேற்று காலையில் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு இருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி சிலுவைப்பட்டியை சேர்ந்த இரும்பு வியாபாரியான மரிய மிக்கேல் அந்தோணி (வயது 55), அவரது மகன் முத்துக்குமார் மற்றும் விருதுநகர் மாவட்டம் சிவகாசி திருத்தங்கல் பகுதியை சேர்ந்த பால்பாண்டியன் (44) என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-
கடந்த சில நாட்களுக்கு முன்பு மரிய மிக்கேல் அந்தோணி செல்போனுக்கு பால்பாண்டியன் தொடர்பு கொண்டார். அப்போது, அவர் தான் வேறு ஒருவருக்கு போன் செய்வதற்கு பதிலாக தங்களுக்கு தவறாக போன் செய்து விட்டேன் என்று தெரிவித்தார். மேலும் பால்பாண்டியன் நான் பணத்தை ரசாயன கலவை மூலம் இரட்டிப்பாக்கி கொடுத்து வருகிறேன். உங்களுக்கு வேண்டும் என்றால் நான் உங்களது பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி உள்ளார்.
இதனை உண்மை என்று நம்பிய மரிய மிக்கேல் அந்தோணி, பால்பாண்டியனை தூத்துக்குடி சிலுவைப்பட்டியில் உள்ள தனது முருங்கை தோட்டத்துக்கு வரும்படி அழைத்து உள்ளார். அதன்படி பால்பாண்டியன் சிலுவைப்பட்டிக்கு நேற்று முன்தினம் மாலையில் வந்தார். அங்கு மரிய மிக்கேல் அந்தோணி கண் முன்னே வெள்ளை காகிதத்தை பணமாக மாற்றி காட்டுவதாக கூறி, ரசாயன கலவை ஊற்றி வைத்த ஒரு பானையை எடுத்துள்ளார். மரிய மிக்கேல் அந்தோணிக்கு தெரியாமல் வெள்ளை காகிதத்துக்கு நடுவே உண்மையான 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்து விட்டு, சிறிது நேரத்துக்கு பின்னர், அதனை வெளியே எடுத்து காட்டினார். அதனை நம்பிய மரிய மிக்கேல் அந்தோணி தான் வைத்து இருந்த ரூ.1.30 லட்சத்தை பால்பாண்டியனிடம் கொடுத்து இதனை இரட்டிப்பாக்கி தர கேட்டார்.
பணத்தை பெற்று கொண்ட பால்பாண்டியன், மரிய மிக்கேல் அந்தோணியை ஏமாற்ற முடிவு செய்து, வெள்ளை காகிதம் கொண்ட கட்டுகளை அந்த பானையில் போட்டார். அதிக கட்டுக்களை போட்டு இருப்பதால், 12 மணி நேரம் கழித்து அதனை எடு்்்ங்கள். வெள்ளை காகிதம் அனைத்தும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டாக மாறியிருக்கும் என்று கூறினார். பின்னர் அவர் ஊருக்கு புறப்பட முயன்றார். ஆனால் பால்பாண்டியனை காலையில் செல்லலாம் என கூறி மரிய மிக்கேல் அந்தோணி தடுத்து உள்ளார். இதனால் பால்பாண்டியன் இரவில் அங்கேயே தங்கி உள்ளார். இதற்கிடையே தகவல் அறிந்த போலீசார் நேற்று காலையில் அங்கு விரைந்து சென்று 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர்.
போலீசாரின் விசாரணைக்கு பின்னரே பால்பாண்டியன் தன்னை ஏமாற்ற முயன்றது மரிய மிக்கேல் அந்தோணிக்கு தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.1.30 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிந்து பால்பாண்டியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பால்பாண்டியன் ஏற்கனவே கேரளா மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் இதே போன்று சிலரை ஏமாற்றி இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரை விசாரிப்பதற்காக சிவகாசிக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story