ஏரல் தாமிரபரணி ஆற்றில் விநாயகர் சிலைகள் விஜர்சனம்
ஏரல் தாமிரபரணி ஆற்றில் விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டன.
ஏரல்,
ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய இந்து முன்னணி சார்பில், ஏரல், உமரிக்காடு, கொற்கை, மணலூர், சிறுத்தொண்டநல்லூர், சூளைவாய்க்கால், பண்டாரவிளை, ஆலடியூர் உள்ளிட்ட பகுதிகளில் 9 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது.நேற்று காலையில் அனைத்து விநாயகர் சிலைகளையும் லோடு ஆட்டோ, மினி லாரி போன்ற வாகனங்களில் ஏற்றி, ஏரல் பஸ் நிலையம் முன்பு கொண்டு வந்தனர். தொடர்ந்து அங்கிருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலம் புறப்பட்டது.
இந்து முன்னணி ஒன்றிய பொதுச்செயலாளர் உமரி பிரபாகரன் தலைமை தாங்கி, கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஏரல் பஸ் நிலையத்தில் இருந்து கடை வீதி மற்றும் முக்கிய தெருக்களின் வழியாக விநாயகர் சிலைகளை வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு சென்று, ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் தாமிரபரணி ஆற்றங்கரையை வந்தடைந்தனர். தொடர்ந்து அங்கு தாமிரபரணி ஆற்றில் விநாயகர் சிலைகளை விஜர்சனம் செய்தனர். இந்து முன்னணி ஒன்றிய தலைவர் நாராயணன், நிர்வாகிகள் ஆத்திப்பழம், லிங்கராஜ், வயனபெருமாள், சுப்பிரமணியன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story