பொதுமக்கள் மழைநீர் சேமிப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் - அமைச்சர் ராஜலட்சுமி வேண்டுகோள்
பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் மழைநீர் சேமிப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என சங்கரன்கோவிலில் அமைச்சர் ராஜலட்சுமி பேசினார்.
சங்கரன்கோவில்,
சங்கரன்கோவில்- ராஜபாளையம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேளாண்மை துறை சார்பில் மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டமான நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார். வேளாண் அறிவியல் மையத்தை சேர்ந்த இளவரசன் வரவேற்றார். திட்ட இயக்குனர் பழனி முன்னிலை வகித்தார்.
விழாவில் அமைச்சர் ராஜலட்சுமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, வேளாண்மை துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-
நீர் மேலாண்மை திட்டத்தின் முன்னோடி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான். அவர் கொண்டு வந்த மழை நீர் சேமிப்பு திட்டத்தை பொதுமக்கள் அனைவரும் சரியாக கடைபிடித்திருந்தால் இந்த அளவிற்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்காது. இனிவரும் காலங்களிலாவது அனைவரும் தங்கள் வீடுகளில் மழைநீர் சேமிப்பு திட் டத்தை செயல்படுத்த வேண்டும். ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்தி வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு விவசாயி என்பதால் மக்களின் துயர் அறிந்து செயல்பட்டு வருகிறார். அவரின் சீரிய முயற்சியால் தற்போது தமிழகம் முழுவதும் குளம், ஊருணிகளில் குடிமராமத்து பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் பொதுமக்களும் தங்கள் பகுதியில் அதிக மழைநீர் தேக்கும் நடவடிக்கைகள், பனை மரங்கள் நடுதல் போன்றவற்றில் ஈடுபட்டால் வருங்கால சந்ததியினர் நலமாக வாழ்வார்கள்.
இவ்வாறு அவர் பேசினார். மத்திய ஊரக வளர்ச்சி நலத்துறை அமைச்சக இயக்குனர் ரூப்ஆவதார் கவுர், நீர் மேலாண்மை குறித்து பேசினார்.
அதனை தொடர்ந்து நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு கையேட்டை அமைச்சர் ராஜலட்சுமி, கலெக்டர் ஷில்பா ஆகியோர் வெளியிட்டு விவசாயிகளுக்கு வழங்கினர். நீர் மேலாண்மையை பயன்படுத்தி விவசாயத்தில் சிறப்பாக செயல்புரிந்து சாதனை செய்த விவசாயிகள் கவுரவிக்கப்பட்டனர். நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அரசு துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story