நெல்லை அருகே இரட்டை ரெயில் பாதை அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் திடீர் போராட்டம்
நெல்லை அருகே இரட்டை ரெயில் பாதை அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
மதுரையில் இருந்து வாஞ்சி மணியாச்சி, நெல்லை வழியாக கன்னியாகுமரி வரை இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணி தற்போது தொடங்கி நடந்து வருகிறது. இதற்காக ஏற்கனவே உள்ள ரெயில் தண்டவாளம் அருகில் நில ஆர்ஜிதம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளம் மருதம் நகர் பகுதியில் புதிய தண்டவாளம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை திடீர் போராட்டத்தில் குதித்தனர். கட்சி கொடிகளுடன் ரெயில்வே தண்டவாளத்தின் அருகில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்துக்கு நெல்லை மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் ராஜகுரு தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பாளையங்கோட்டை தாலுகா செயலாளர் வரகுணன், முன்னீர்பள்ளம் விவசாயிகள் சங்க செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த முன்னீர்பள்ளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விவசாயிகள் தரப்பில், தங்களது விவசாய நிலத்தை ரெயில்வே நிர்வாகம் அனுமதி பெறாமல் எடுத்துக் கொண்டதுடன், அதற்கு உரிய இழப்பீட்டு தொகையும் தரவில்லை. இந்த நிலையில் எங்களது நிலத்தில் இரட்டை ரெயில் பாதை அமைக்க மண் அடித்து நிரப்பும் பணியை ரெயில்வே ஒப்பந்ததாரர்கள் மேற்கொண்டு உள்ளனர். எனவே பணியை உடனடியாக நிறுத்த வேண்டும், எங்களது நிலத்தில் ரெயில்வே துறைக்கு தேவைப்படும் பகுதி, அவற்றின் எல்கை அளவு ஆகியவற்றை குறிப்பிட்டு, உரிய இழப்பீடு தொகை தந்து நிலத்தை பெற்று அதன் பிறகே பணியை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர்.
அப்போது போலீசார் ரெயில்வே அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பேசி உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story