கட்சிக்காக உழைப்பவர்களை பா.ஜனதா கைவிடுவதில்லை - மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் பேட்டி


கட்சிக்காக உழைப்பவர்களை பா.ஜனதா கைவிடுவதில்லை - மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் பேட்டி
x
தினத்தந்தி 3 Sep 2019 11:15 PM GMT (Updated: 3 Sep 2019 8:38 PM GMT)

கட்சிக்காக உழைப்பவர்களை பா.ஜனதா கைவிடுவதில்லை என்று திருப்பூரில் அந்த கட்சியின் மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் கூறினார்.

திருப்பூர்,

பா.ஜனதா கட்சியின் கோவை பெருங்கோட்ட தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று மாலை திருப்பூர் காங்கேயம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதற்கு மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், தேர்தல் பொறுப்பாளர் ராமலிங்கம், மாநில துணைத்தலைவர் சிவகாமி பரமசிவம், மாநில செயலாளர் நந்தகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜனதா கட்சியின் அமைப்பு தேர்தல் வருகிற 11-ந் தேதி தொடங்க இருக்கிறது. எங்கள் கட்சியை பொறுத்தவரை ஒவ்வொரு பூத்துகளும் கிளைகளாக கருதப்படுகிறது. அந்த கிளைகளின் தேர்தல் வருகிற 11-ந் தேதி முதல் இந்த மாத இறுதி வரை நடக்கிறது. அதன் பின்னர் அடுத்த மாதம் ஒவ்வொரு பகுதி வாரியாக மாவட்ட தலைவர் தேர்தல், மாநில தலைவர் தேர்தல் என ஒவ்வொரு நிலைகளாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நடத்துகிற தேர்தல் அதிகாரிகளுக்கு தனியாக பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. கா‌‌ஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளதால் அது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு மாவட்டங்களின் தலைநகரங்களில் அரங்க கூட்டம் நடத்தப்பட உள்ளது.

இதில் கட்சியின் உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் சமுதாயத்தில் பல நிலைகளில் உள்ள முக்கியமான நபர்களை அழைத்து இந்த கூட்டம் நடத்தப்பட உள்ளது. வருகிற 17-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு வாரம் சேவை வாரமாக கொண்டாட பா.ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது. இதில் குறிப்பாக மாற்றுத்திறனாளிகள். அவர்களுக்கு என்னென்ன உதவிகள் தேவைப்படுகிறதோ அந்த உதவிகள் செய்யப்படும். மேலும், மாற்றுத்திறனாளிகள் தத்தெடுக்கப்படும் நிகழ்ச்சியும் அந்த சேவை வாரத்தில் நடைபெறும். அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந் தேதி மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும் குறைந்தது 15 நாட்கள் பாதயாத்திரை நடத்தப்படும்.

அது கட்சியின் சார்பில் இல்லாமல் காந்தியின் கொள்கைகளை முன்னெடுக்கும்அமைப்புகளை முன்னெடுத்து இந்த நிகழ்ச்சியை நடத்த கட்சி முடிவு செய் துள்ளது.

கா‌‌ஷ்மீர் விவகாரத்தில் தி.மு.க. முதலில் எதிர்த்தார்கள். பின்னர் அவர்கள் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் நிலைப்பாடு தெரிந்த பிறகுஅவர்கள் பின் வாங்கி விட்டார்கள். இவ்வாறு பல முக்கிய அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்தும், அரசியல் செய்வதற்காக தி.மு.க. இந்த நிலைப்பாட்டை எடுத்தது. அது எடுபடவில்லை என்ற பின்னர் தற்போது ஒவ்வொரு தலைவர்களும் ஒவ்வொரு விதமாக பேசி வருகிறார்கள்.

பா.ஜனதா மாநில தலைவராக யார் வருவார் என கட்சியின் மேலிடம் முடிவு செய்யும். அதற்கென வழிமுறைகள் உள்ளது. பா.ஜனதா கட்சியை பொறுத்தவரை ஒரு குழுவாக கட்சி செயல்பாடு இயங்கி வருகிறது. கட்சியின் ஒரு பொறுப்பில் ஒருவர் இல்லை என்றால், பணியில் பாதிப்பு ஏற்படாது. மற்ற பொறுப்பாளர்கள் அதனை முன்னெடுத்து சென்று கொண்டிருக்கிறார்கள்.

யாருக்கு எந்த பொறுப்பு கிடைத்தாலும் அதனை முழு மனதோடு ஏற்று பா.ஜனதா கட்சி பணியாற்றும். மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு கவர்னராக பொறுப்பு கொடுத்து இருப்பது மிகவும் சிறப்பானது. கட்சிக்காக உழைப்பவர்களை பா.ஜனதா கட்சி கைவிடுவதில்லை. எனவே நம்பிக்கையோடு உழைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதன் பின்னர் தொழில் துறையினருடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இதில் தொழில்துறையினர் பிரச்சினைகள் குறித்துகேட்டறிந்தார். தொடர்ந்து ஜி.எஸ்.டி. ரீபண்ட், நிலுவையில் உள்ள மானியத்தொகை, வங்கி பிரச்சினை, வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் என தொழில்துறையினரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அறிவுறுத்தி நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம், செயலாளர் விஜயகுமார், காஜா பட்டன் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ருத்திரமூர்த்தி, சிம்கா சங்கத்தை சேர்ந்த பார்த்திபன், சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தை சேர்ந்த முருகசாமி,பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story