முன்னாள் மந்திரி அப்துல் சத்தார் சிவசேனாவில் இணைந்தார்
மராட்டிய சட்டமன்ற தேர்தல் வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், தலைவர்கள் ஆளும் பா.ஜனதா, சிவசேனா கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.
மும்பை,
அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள சில்லாட் தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் மந்திரி அப்துல் சத்தார் தன்னை சிவசேனாவில் ஐக்கியப்படுத்தி கொண்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அப்துல் சத்தார், அப்போது தான் வகித்து வந்த எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார். தனது தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பா.ஜனதா வேட்பாளர் ராவ்சாகேப் தன்வேவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.
இந்த நிலையில் அப்துர் சத்தார் நேற்று முன்தினம் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். இதுகுறித்து உத்தவ் தாக்கரே நிருபர்களிடம் கூறுகையில், “சில்லாட் சட்டமன்ற தொகுதியில் சிவசேனா வெற்றி பெறுவதை நான் காண விரும்புகிறேன். இது எங்களுக்கு ஒரு முக்கியமான தொகுதியாகும்” என்றார்.
இதன்மூலம் வரும் சட்டமன்ற தேர்தலில் சில்லாட் தொகுதிதியில் அப்துல் சத்தாருக்கு சிவசேனா வாய்ப்பு வழங்கும் என்று தெரிகிறது.
Related Tags :
Next Story