ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கக்கோரி சப்-கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை - 89 பேர் கைது


ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கக்கோரி சப்-கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை - 89 பேர் கைது
x
தினத்தந்தி 4 Sept 2019 4:15 AM IST (Updated: 4 Sept 2019 3:58 AM IST)
t-max-icont-min-icon

மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கக்கோரி சாரம் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் 89 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை சாரம் ஜீவா சிலை அருகில் விவசாயிகள் ஒன்று கூடினர். அங்கிருந்து ஊர்வலமாக சென்று சாரம் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு சங்கத்தின் சிறப்பு தலைவர் மாசிலாமணி தலைமை தாங்கினார். தலைவர் ரவி, பொதுச்செயலாளர் கீதநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர் விசுவநாதன் போராட்டத்தினை தொடங்கி வைத்தார்.

போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சலீம், புதுச்சேரி விவசாயிகள் தொழிலாளர் சங்க செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இது பற்றிய தகவல் அறிந்த உடன் கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் ஆகியோர் அங்கு விரைந்து சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 34 பெண்கள் உள்பட 89 பேரை கைது செய்தனர்.

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சாமிநாதன் குழுவின் அறிக்கையை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். 60 வயது நிரம்பிய விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், கிராமப்புற கைவினை கலைஞர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

விவசாயிகள் வங்கிகளில் பெற்றுள்ள கடன்களை அரசே ஏற்று அதனை தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு மானிய விலையில் தரமான விதைகள், உரம், பூச்சி மருந்துகள் உரிய காலத்தில் வழங்க வேண்டும். தென்னக நதிகளை இணைக்க வேண்டும்.

ஏரி, குளம், வாய்க்கால்களை தூர்வாரி நீர் ஆதாரத்தை பலப்படுத்த வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டம் நடந்தது.

Next Story