ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் முதல் முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை


ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் முதல் முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை
x
தினத்தந்தி 4 Sept 2019 4:08 AM IST (Updated: 4 Sept 2019 4:08 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் முதல்முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை டாக்டர்கள் வெற்றிகரமாக செய்து முடித்து சாதனை படைத்தனர். இதில் தாயின் சிறுநீரகம் வாலிபருக்கு பொருத்தப்பட்டது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தை சேர்ந்த 32 வயதுடைய வாலிபர் ஒருவருக்கு சிறுநீரகம் செயல் இழந்து போனது. அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரிடமும், அவருடைய குடும்பத்தினரிடமும் தெரிவித்தனர். இதையடுத்து அவருடைய 68 வயது நிரம்பிய தாயார் தனது மகனுக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்க முன்வந்தார்.

இதையடுத்து சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, வாலிபருக்கு, தாயாரிடம் இருந்த சிறுநீரகத்தை அறுவை சிகிச்சை மூலம் பொருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி நேற்று காலை 10 மணியளவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தொடங்கியது. டீன் பாலாஜிநாதன் தலைமையில் டாக்டர்கள் இரண்டு குழுவினராக செயல்பட்டு அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் முதல்முறையாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டதால் அவர்களுக்கு உதவியாக நிபுணத்துவம் பெற்ற மதுரை அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் குழுவினரும் வரவழைக்கப்பட்டு இருந்தனர்.

காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த அறுவை சிகிச்சை மதியம் 1 மணி வரை 3 மணி நேரம் நடந்தது. இதில் டாக்டர்கள் தாயாரிடம் இருந்து சிறுநீரகத்தை எடுத்து, மகனுக்கு பொருத்தினர்.

வெற்றிகரமாக நடந்து முடிந்த இந்த அறுவை சிகிச்சைக்குப் பின் தாயும், மகனும் தீவிர கவனிப்பு பிரிவில் வைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். தற்போது இருவரும் நலமாக இருப்பதாக டீன் பாலாஜிநாதன் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், “ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் தற்போது ரத்தக்குழாய் அடைப்பை நீக்கும் அறுவை சிகிச்சைப் பிரிவு (கேத்லேப்) சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்படுகிறது. வருகிற 18-ந் தேதி முதல் இந்த பிரிவில் ரத்தக்குழாய் அடைப்பை நீக்கும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். மனநோயாளிகளுக்கு மின்சாரம் மூலம் சிகிச்சை அளிக்கும் பிரிவு 18-ந் தேதி முதல் செயல்படும்” என்றார்.


Next Story