மும்பையில் மீண்டும் பருவமழை தீவிரம்; விடிய, விடிய கனமழை கொட்டியது
மும்பையில் 20 நாள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. நேற்று விடிய, விடிய கனமழை கொட்டியது.
மும்பை,
மும்பையில் பருவமழை பெய்து வருகிறது. ஜூன், ஜூலை மாதங்களில் கனமழை கொட்டியது. இதன் காரணமாக மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தான்சா, விகார், மோடக்சாகர், துல்சி ஆகிய 4 ஏரிகள் நிரம்பின. கடந்த மாத தொடக்கத்திலும் மும்பையில் கனமழை பெய்தது.
இதன் காரணமாக ரெயில்சேவை கடுமையாக முடங்கியது. அதன்பின்னர் மும்பையில் மழையின் தீவிரம் குறைந்து இருந்தது. 20 நாட்களுக்கு மேலாக பெரியளவில் மழை பெய்யவில்லை.
இந்தநிலையில், மும்பையில் மீண்டும் பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று விடிய, விடிய மும்பையில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. மேலும் காலை நேரத்தில் 38 வழித்தடங்களில் பெஸ்ட் பஸ் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இதேபோல தானே, நவிமும்பையிலும் பலத்த மழை பெய்தது.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் சாந்தாகுருசில் 13 செ.மீ. மழையும், கொலபாவில் 8 செ.மீ. மழையும் பதிவானது.
இந்தநிலையில், இன்றும் (புதன்கிழமை) மும்பையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
Related Tags :
Next Story