குறைந்த அபராதம் விதித்து வரிபாக்கிகளை வசூலிக்க முடிவு - நாராயணசாமி தகவல்


குறைந்த அபராதம் விதித்து வரிபாக்கிகளை வசூலிக்க முடிவு - நாராயணசாமி தகவல்
x
தினத்தந்தி 4 Sept 2019 4:30 AM IST (Updated: 4 Sept 2019 4:28 AM IST)
t-max-icont-min-icon

குறைந்த அபராதம் விதித்து வரிபாக்கிகளை வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை சட்டசபையில் பட்ஜெட் உரை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு 2 மடங்கு மானியங்களை கொடுத்து வருகிறோம். 6 ஆயிரம் பசு மாடுகள் கொடுக்க உள்ளோம். இலவச அரிசி கொடுக்க ரூ.160 கோடி ஒதுக்கி உள்ளோம். இதற்கும் சில இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன. அதையும் மீறி ஒப்புதல் கிடைக்கும் என்று நம்புகிறோம்.

சட்டம், ஒழுங்கு, சுற்றுச்சூழல், தொழில்தொடங்குவதில் இந்திய அளவில் 5-வது இடத்தில் புதுச்சேரி உள்ளது. பல துறைகளில் தேசிய அளவிலான பல விருதுகளை பெற்றுள்ளோம். தற்போது ஜனாதிபதியின் நல்லாசிரியர் விருதும் புதுச்சேரி ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வியில் தேர்ச்சி சதவீதமும் அதிகரித்துள்ளது. பிளஸ்-2 தேர்வில் 8 சதவீதமும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 9 சதவீதமும் அதிக அளவில் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு உதவித்தொகைகளை இந்த பட்ஜெட்டில் அறிவித்துள்ளோம்.

ஒரு துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மற்றொரு துறைக்கு ஒதுக்குவது இல்லை. பல பல்கலைக்கழகங்களை உருவாக்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. வருமானத்தை பெருக்க எம்.எல்.ஏ.க்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

குறிப்பாக பெட்ரோல், டீசல், கலால், மின்சார வரி பாக்கிகளை வசூலிக்க அபராதத்தை குறைவாக விதித்து வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்போது கூடுதல் வரிகளை விதிக்க வழியும் இல்லை. மத்திய அரசும் நிதியுதவியை குறைத்துவிட்டது.

விபத்தில் அடிபட்டவர்களை உடனடியாக சிகிச்சைக்கு சேர்க்க நடவடிக்கை எடுப்பவர்களுக்கு பணப்பரிசு வழங்குவது தொடர்பாக எதிர்மறையான கருத்துகளை தெரிவித்தனர். ஆனால் அதனை 10 லட்சம் பேர் வரவேற்றுள்ளனர்.

இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

Next Story