டி.கே.சிவக்குமார் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்ட மந்திரி ஸ்ரீராமுலு
டி.கே.சிவக்குமார் பற்றி கூறிய கருத்துக்காக மந்திரி ஸ்ரீராமுலு மன்னிப்பு கேட்டுள்ளார்.
பெங்களூரு,
வருமான வரி சோதனையின்போது கணக்கில் வராத பணம் சிக்கியது குறித்து முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து கருத்து தெரிவித்த சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரி ஸ்ரீராமுலு, “உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடிக்க வேண்டும், தவறு செய்தவர்கள் தண்டனையை அனுபவிக்க வேண்டும்“ என்றார். இதற்கு டி.கே.சிவக்குமார் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இந்த நிலையில் மந்திரி ஸ்ரீராமுலு, தான் கூறிய கருத்துக்காக மன்னிப்பு கோரியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று சித்ரதுர்காவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
யாராக இருந்தாலும் கஷ்டத்தில் இருக்கும் ஒருவரை விமர்சிப்பது சரியல்ல. டி.கே.சிவக்குமார் பற்றி நான் கூறிய கருத்து, அரசியலை அடிப்படையாக கொண்டது. தனிப்பட்ட முறையில் அவரை விமர்சிக்கவில்லை. அவரின் மனதுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும் வகையில் நான் எந்த கருத்தையும் கூறவில்லை. ஒருவேளை நான் கூறிய கருத்து, அவரது மனதுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தால், அதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு ஸ்ரீராமுலு கூறினார்.
இதுகுறித்து டெல்லியில் நிருபர்களிடம் பேசிய டி.கே.சிவக்குமார், “ஸ்ரீராமுலு எனது நண்பர். அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். அவருக்கு நல்லது நடக்கட்டும். நானும் நிறைய அரசியல் செய்துள்ளேன். அவர் அரசியல் ரீதியில் என்னை பற்றி பேசினாரோ, இல்லையோ எனக்கு தெரியாது. ஆனால் ஒருமுறை பேசிவிட்டால் அது முடிந்துவிட்டது. நானும் சில நேரங்களில் தவறாக பேசியுள்ளேன்“ என்றார்.
Related Tags :
Next Story