இன்று கெம்பேகவுடா ஜெயந்தி கொண்டாட்டம்: ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா உள்பட 100 பேருக்கு விருது


இன்று கெம்பேகவுடா ஜெயந்தி கொண்டாட்டம்: ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா உள்பட 100 பேருக்கு விருது
x
தினத்தந்தி 3 Sep 2019 11:50 PM GMT (Updated: 3 Sep 2019 11:50 PM GMT)

பெங்களூரு மாநகராட்சி சார்பில் இன்று(புதன்கிழமை) கெம்பேகவுடா ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது. இந்த கொண்டாட்டத்தின்போது ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா உள்பட 100 பேருக்கு, மாநகராட்சி சார்பில் கெம்பேகவுடா பெயரில் விருது வழங்கப்பட உள்ளது.

பெங்களூரு, 

பெங்களூரு நகரை கட்டமைத்தவர் கெம்பேகவுடா. மறைந்த கெம்பேகவுடாவின் நினைவாக ஆண்டுதோறும் கெம்பேகவுடா ஜெயந்தி பெங்களூரு மாநகராட்சி சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கொண்டாட்டத்தின்போது பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு, மாநகராட்சி சார்பில் கெம்பேகவுடா விருது வழங்கப்படுவது வழக்க மாகும்.

அதன்படி 508-வது கெம்பேகவுடா ஜெயந்தி பெங்களூரு மத்திய அலுவலகத்தில் இன்று(புதன்கிழமை)காலை 8 மணிக்கு வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. விழாவானது மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கெம்பேகவுடா சிலை மற்றும் லட்சுமி தேவி சிலைக்கு மாலை அணிவிப்பதன் மூலம் தொடங்குகிறது. அதன்பிறகு பெங்களூரு நகரின் நான்கு திசைகளிலும் உள்ள கெம்பேகவுடா கோபுரத்துக்கு மேயர் கங்காம்பிகே சிறப்பு பூஜை செய்ய உள்ளார்.

இந்த கொண்டாட்டத்தையொட்டி இலக்கியம், நாடகம், திரைப்படம், சமூக சேவை உள்பட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 100 பேருக்கு, மாநகராட்சி சார்பில் கெம்பேகவுடா விருது வழங்கப்படுகிறது. அதன்படி சந்திரசேகர் பட்டீல் (கன்னட மொழி சேவை), எழுத்தாளரும்-நடிகருமான முக்கியமந்திரி சந்துரு (திரைப்படம்), குருராஜ் கரஜகி (கல்வி), சிவானந்தா (மருத்துவம்), சிதம்பரம் என்.ஏ.(சமூக சேவை), சிவராமய்யா (எழுத்து), கேசவரெட்டி ஹந்த்ராலா (எழுத்து), அப்துல் பஷீர் (எழுத்து), பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா (அரசு ஊழியர்), சம்பத் (சுதந்திர போராட்ட தியாகி) உள்பட 100 பேருக்கு கெம்பேகவுடா விருது வழங்கப்பட உள்ளது.

விருது வாங்கும் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா, ரெயில்வே பிரிவு ஐ.ஜி.யாக செயல்பட்டு வருகிறார். இவர் சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்தபோது தான் பரப்பனஅக்ரஹாரா சிறை முறைகேட்டை வெளிக்கொண்டு வந்தார். அத்துடன் சசிகலாவிடம் இருந்து ரூ.2 கோடி லஞ்சமாக பெற்று அவருக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்யப்பட்டதாகவும் ரூபா குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது. 

Next Story