டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு; அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று தலைவர்கள் குற்றச்சாட்டு


டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு; அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று தலைவர்கள் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 4 Sept 2019 5:35 AM IST (Updated: 4 Sept 2019 5:35 AM IST)
t-max-icont-min-icon

டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டதற்கு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று மத்திய அரசு மீது குற்றச்சாட்டும் கூறியுள்ளனர்.

பெங்களூரு, 

முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாரை அமலாக்கத்துறையினர் நேற்று கைது செய்தனர். இதற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தனது டுவிட்டர் பதிவில், ‘மத்தியில் உள்ள பா.ஜனதா அரசால் விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சி தலைவர்கள் ஒவ்வொரு நாளும் குறிவைக்கப்படுகிறார்கள். மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசின் தோல்வியை மறைக்கவும், எதிர்ப்பு குரலை கட்டுப்படுத்தவும் தான் இதுபோன்ற நடவடிக்கை மேற்கொண்டு மக்கள் திசைதிருப்பப்படுகிறார்கள். பா.ஜனதாவின் பழிவாங்கும் அரசியலுக்கு டி.கே.சிவக்குமார் பலியாகி உள்ளார். விரைவில் அவர் நிரபராதியாக வெளியே வருவார். அந்த சமயத்தில் மத்திய பா.ஜனதாவின் வெளிப்படையான முகம் தெரியவரும். இந்த இடர்பாடான நேரத்தில் நாங்கள் அனைவரும் உங்களுக்கு ஆதரவு அளிப்போம்‘ என்று குறிப்பிட்டு உள்ளார்.

முன்னாள் முதல்-மந்திரி எச்.டி.குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘பண்டிகைக்கு கூட அனுமதிக்காமல் தொடர் விசாரணை நடந்த நிலையில் டி.கே.சிவக்குமார் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறி அமலாக்கத்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். மத்திய அரசு விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி எதிர்க்கட்சி தலைவர்களை ஒடுக்குகிறது‘ என்று குறிப்பிட்டு உள்ளார்.

கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு பிறகு அரசியல் பழிதீர்க்கும் நடவடிக்கையாக டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டு உள்ளார். குதிரை பேரத்தை எதிர்த்த டி.கே.சிவக்குமாருக்கு எதிராக பா.ஜனதா சில்லரை தனமான அரசியல் செய்வதோடு, மத்தியில் பாசிசம் அரசு இருப்பதை காட்டுகிறது‘ என்று குறிப்பிட்டு உள்ளார். 

Next Story