வாக்காளர் பட்டியலை பொதுசேவை மையங்களில் சரிபார்க்கலாம் - கலெக்டர் தகவல்
பொதுசேவை மையங்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளிட்ட விவரங்களை சரிபார்க்கலாம் என்று கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்,
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி, தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் நடைபெற உள்ளன. அதில் வாக்காளர் சேர்க்கை, நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கான வாக்காளர்களிடம் விண்ணப்ப படிவங்கள் பெறப்பட இருக்கிறது. இதற்காக வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட உள்ளன.
இதையொட்டி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்கள் தங்களுடைய பெயர் உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. அதன்படி வருகிற 30-ந்தேதி பொதுசேவை மையங்களில் வாக்காளர் பட்டியலை சரிபார்க்கலாம். இதற்காக மத்திய அரசின் டிஜிட்டல் சேவா, மாவட்ட மின்ஆளுமை முகமை அங்கீகாரம் பெற்ற பொதுசேவை மையங்கள், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் நடத்தும் பொதுசேவை மையங்கள் மற்றும் தனியார் சேவை மையங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பொதுசேவை மையங்களில் மட்டுமின்றி மாவட்ட கலெக்டர் அலுவலகம், அனைத்து தாலுகா அலுவலகங்கள், ஆர்.டி.ஓ. அலுவலகங்களிலும் வாக்காளர் பட்டியலை வாக்காளர்கள் சரிபார்க்கலாம். அதற்கு வசதியாக பொதுமக்களின் பார்வைக்காக, அந்த அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டு இருக்கிறது.
எனவே, பொதுசேவை மையங்கள் அல்லது அரசு அலுவலகங்களுக்கு வாக்காளர்கள் நேரில் சென்று, வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள தங்களுடைய பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து கொள்ளலாம், என்று கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story