கோவை விமானநிலையத்தில் வெடிகுண்டு சோதனை திடீரென்று நடைபெற்றதால் பரபரப்பு


கோவை விமானநிலையத்தில் வெடிகுண்டு சோதனை திடீரென்று நடைபெற்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 4 Sep 2019 10:30 PM GMT (Updated: 4 Sep 2019 4:42 PM GMT)

கோவை விமானநிலையத்தில் வெடிகுண்டு சோதனை திடீரென்று நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பீளமேடு,

கோவை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கடந்த சில நாட்களாகவே கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு, 6 பயங்கரவாதிகள் கோவையில் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை தகவல் அளித்தது.

இதனைத்தொடர்ந்து கோவை முழுவதும் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு, முக்கிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு அனைத்து வாகனங்களும் கண்காணிக்கப்பட்டனர். தற்போது கோவை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி கோவையில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலங்கள் நடைபெற்று வருகின்றன. இதனைத்தொடர்ந்து நகரம் முழுவதும் மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஏ.கே.47 ரக துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விமான நிலையத்திற்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் கடுமையாக சோதனை செய்யப்பட்டு அனுப்பப்பட்டு வருகிறது. இதில் பாதுகாப்பு படையினருடன் உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையத்தின் உள்ளேயும் வெளியேயும் வரும் பயணிகள், பார்வையாளர்கள் கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். மெட்டல் டிடெக்டர் மூலமும் சோதனை நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை கோவை விமான நிலையத்தில் திடீரென்று மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. இதில் வெடிகுண்டுகளை மோப்பம் பிடித்து கண்டறியும் மோப்பநாயின் உதவியுடன் சோதனை நடைபெற்றது. இந்த அதிரடி சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் கண்டறியப்படவில்லை.

சுமார் 2 மணிநேரம் நடந்த சோதனையால் விமானநிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கோவை விமானநிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, இதுவழக்கமான சோதனைதான். விமானநிலையத்துக்கு வரும் பயணிகள் பதற்றப்பட வேண்டிய அவசியம் இல்லை. பாதுகாப்பு படையினர் தங்களது கடமையை செய்கின்றனர் என்று கூறினார்கள்.

Next Story