பள்ளிக்கூடத்தில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி; 3 ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணை


பள்ளிக்கூடத்தில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி; 3 ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 5 Sept 2019 5:15 AM IST (Updated: 5 Sept 2019 12:57 AM IST)
t-max-icont-min-icon

உச்சிப்புளி அருகே பள்ளி வளாகத்தில் இருந்த மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் தாக்கி 8-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து 3 ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே உள்ள கல்கிணற்று வலசை கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுனாமி குடியிருப்பில் வசித்து வரும் சேர்வைக்காரன் ஊருணி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ்-பாக்கியலட்சுமி தம்பதியரின் மகன் கார்த்தீசுவரன் (வயது 13) 8-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த சிறுவன் பள்ளியில் உள்ள தொட்டிக்கு தண்ணீர் ஏற்றுவதற்காக மின் மோட்டாரை இயக்க செல்வது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று காலை மாணவர்கள் கவின், கோபிநாத், சந்துரு ஆகிய 3 பேர் பள்ளியின் மாடிக்கு சென்று தண்ணீர் நிரம்பி விட்டதா என்று பார்க்க சென்றுள்ளனர்.

அப்போது மாணவன் கார்த்தீசுவரன் கீழ் தளத்தில் மோட்டார் உள்ள இடத்துக்கு சென்று தண்ணீர் வருகிறதா என்று பார்க்க மோட்டாரில் உள்ள கேட் வால்வை திறந்துள்ளான்.

அப்போது மோட்டாரில் மின் கசிவு ஏற்பட்டு மாணவன் கார்த்தீசுவரன் உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்த சம்பவம் குறித்து உச்சிப்புளி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் ரோஸ்மேரி ராமநாதபுரத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு சென்று விட்டதால் பொறுப்பில் இருந்த தமிழரசன் உள்ளிட்ட 3 ஆசிரியர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story