மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து


மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் திடீர் தீ விபத்து
x
தினத்தந்தி 5 Sept 2019 4:30 AM IST (Updated: 5 Sept 2019 1:05 AM IST)
t-max-icont-min-icon

மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர்.

மதுரை,

மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதுதவிர ஏராளமானோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தென் தமிழகத்தில் பெரிய ஆஸ்பத்திரியாக இருப்பதால் தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் சிகிச்சைக்காக இங்கு வந்து செல்கின்றனர். இங்குள்ள 2-வது மாடியில் தீக்காய சிகிச்சை பிரிவின் அருகே 227-வது வார்டு செயல்பட்டு வருகிறது. இங்கு தீ விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்த பின்னர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வார்ட்டில் தற்போது 20-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று மதியம் 1.30 மணி அளவில் வார்டின் அருகே உள்ள அறையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அந்த அறையில் நோயாளிகள் பயன்படுத்திய துணி பொருட்கள் வைக்கப்பட்டிருந்ததால் தீ மளமளவென பரவியது. இதனால், வார்டு முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.

உடனடியாக அங்கிருந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள், நோயாளிகளை அவசர அவசரமாக மற்றொரு வார்டுக்கு இடமாற்றினர். மேலும் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு தீ மேலும் பரவாமல் தடுத்ததுடன் முழுவதுமாக அணைத்தனர். இதனால் பெரிய ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சங்குமணி கூறும்போது, வார்டின் அருகே உள்ள சிறிய அறையில் நோயாளிகள் பயன்படுத்திய தலையணை, பெட்ஷீட் போன்ற பொருட்கள் இருந்தன. அதில் தீ விபத்து ஏற்பட்டது. புகை மூட்டம் உருவானதை தொடர்ந்து நோயாளிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு மற்றொரு வார்டில் சேர்க்கப்பட்டனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்படவில்லை. காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம் என்றார்.

தீயணைப்பு துறையின் தென்மண்டல துணை இயக்குனர் சரவணகுமார் கூறுகையில், இது சிறிய அளவிலான தீ விபத்து தான். எந்தவித அசம்பாவிதமும் நடைபெறவில்லை. அதேபோன்று நோயாளிகள் அல்லது நோயாளிகளை பார்க்க வந்த யாரேனும் ஒருவர் விட்டு சென்ற நெருப்பின் மூலம் தீ பரவி இருக்கலாம். தீ விபத்து நிகழ்ந்த உடனே மருத்துவமனை ஊழியர்களே தீயை உடனடியாக அணைத்து விட்டனர் என்றார்.

Next Story