ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை - வசந்தகுமார் எம்.பி. பேச்சு


ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை - வசந்தகுமார் எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 5 Sept 2019 4:45 AM IST (Updated: 5 Sept 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை எடுப்பேன் என்று வசந்தகுமார் எம்.பி. பேசினார்.

பூதப்பாண்டி,

நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் எச்.வசந்தகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதைத்தொடர்ந்து அவர் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி முழுவதும் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.

நேற்று தோவாளை தாலுகாவுக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.

இறச்சகுளம் சந்திப்பில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலில் என்னை தேர்ந்தெடுத்தால் உங்களுக்காக நான் பணியாற்றுவேன் என்று உறுதிமொழி அளித்தேன். அதன்படி 31 நாட்கள் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில் நான் 22 முறை பேசி தமிழகத்தில் இருந்து சென்ற உறுப்பினர்களில் முதன்மை இடத்தை பிடித்துள்ளேன் என்று சொன்னால் அது உங்களால்தான் சாதிக்க முடிந்தது.

நாடாளுமன்றத்தில் நமது மாவட்டத்தில் மருத்துவ வசதி அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக ஆசாரிபள்ளம் பொது மருத்துவமனையை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்ற வேண்டும். ரெயில்வே துறை தனியார் மையமானால் 1 கோடியே 30 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்படும். எனவே, ரெயில்வே துறையை தனியார் மையமாக்க கூடாது. வியாபாரிகளுக்கு ஜி.எஸ்.டி. மூலம் வருகின்ற இடையூறுகளை களைய வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு 100 நாட்கள் திட்டத்தை 150 நாட்களாக மாற்ற வேண்டும். நகர்புறத்தில் உள்ள ஏழை, எழிய மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும் என்று கேட்டு இருக்கிறேன். மேலும், நான் எடுக்கின்ற முயற்சிகளை அமல்படுத்த எப்போதும் உங்கள் ஆதரவு தரவேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து அவர், நாவல்காடு, ஈசாந்திமங்கலம், துவரங்காடு, பூதப்பாண்டி, திட்டுவிளை, அருமநல்லூர், அழகியபாண்டியபுரம் போன்ற பகுதிகளுக்கு திறந்தவெளி ஜீப்பில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது, பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை அவர் பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் வட்டார காங்கிரஸ் தலைவர் நாஞ்சில் செல்வராஜ், தோவாளை ஒன்றிய தி.மு.க. செயலாளர் நெடுஞ்செழியன், பூதப்பாண்டி பேரூர் காங்கிரஸ் செயலாளர் கலீல் ரகுமான், தி.மு.க. செயலாளர் ஆலிவர்தாஸ் உள்பட கூட்டணி கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story